2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்கு இடமளிக்கக்கூடாது’

Editorial   / 2019 மார்ச் 05 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ சண்முகநாதன் 

நிறைவேற்று அதிகார முறையால் சிறுபான்மை மக்கள் பயனடைவர் எனத் தெரிவித்துள்ள, மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், அதை நீக்கும் முயற்சிக்கு இடமளிக்க முடியாதெனவும் தெரிவித்தார்.  

ஹங்குராங்கத்த லூல்கந்துர தோட்டத்தில், 3 35 வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

பெருந்தோட்ட மக்களுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளாகத்தான், அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் அமைந்துள்ளது என்றும் அதை வலுப்படுத்தும் வகையிலேயே, பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறிய அவர், அதேபோல, விரைவில் பிரதேச செயலகங்களும் அமையவுள்ளது என்றும் கூறினார்.  

வீடமைப்புத் திட்டங்கள் விரைவாக மேற்கொள்ளப்படுவதுடன், காணி, வீட்டு உரிமைப் பத்திரங்களும் வழங்கப்பட்டு வருதாகத் தெரிவித்த அவர், மலையகத்துக்கான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு வசதியாகவே, மலையக அபிவிருத்தி அதிகார சபையும் உருவாக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தார்.  

வீடுகள் கிடைக்கவில்லையென, மக்கள் தம்முடன் முரண்படுவதாகவும் மலையக தொழிலாளர்களுக்கு, கட்டப்பட வேண்டியுள்ள 1 இலட்சத்துக்கு 60 ஆயிரம் வீடுகளையும் ஒரே தடவையில் கட்டிக்கொடுத்துவிட முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.  

கடந்த காலங்களில், 8 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு ஆண்டுகளில், இவ்வளவு செய்ய முடியுமாயின், கடந்த 40 ஆண்டுகளாக அரசியல் செய்தவர்கள் நினைத்திருந்தால், வீட்டுப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு கண்டிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.  

மேலும் மலையகத்தில் நீர் வசதிகளை மேம்படுத்தும் செயற்பாடுகள் முனனெடுக்கப்படுவதாகவும் தனித்து நின்று வெற்றிபெற முடியாத காரணத்தால், தமிழ் முற்போக்குக் கூட்டணியாக இணைந்து நாடாளுமன்றத்தில் அரசியல் பலத்துடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.  

அத்துடன் இந்நாட்டின் அனைத்து இன மக்களும் பயனடையும் வகையிலேயே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்டதாகவும் இந்த முறையே, நாட்டுக்கு பொறுத்தமானதெனவும் இந்த முறை காணப்பட்டதாலேயே, அமிர்தலிங்கம், எதிர்க்கட்சி தலைவராகத் தெரிவாக கூடிய வாய்ப்பு கிடைத்ததெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அதனால், ஜனாதிபதி முறைமையை மாற்ற முயற்சிப்பவர்களுக்கு இடமளிக்க கூடாதெனக் கூறிய அவர், மாற்றப்படும் பட்சத்தில், சிறுபான்மை மக்களே பாதிக்கப்படுவர் என்றும் எச்சரித்ததோடு, பழைய முறையிலேயே அடுத்த தேர்தல்களை நடத்த வேண்டுமெனவும் கூறினார்.  

மேலும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிமரசிங்க போட்டியிட்டால், அவருக்கு முழுமையான ஆதர​வை வழங்குவதாகவும், 2020ஆம் ஆண்டு மலையக மக்களின் வீட்டுத் தேவையை முழுமையாக பூர்த்தி செய்த பின்னர், அடுத்த ஆட்சியில் மேலும் பல அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .