2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பணம் செலுத்தாததால் மாணவியை புறக்கணித்த கல்லூரி நிர்வாகம்?

Editorial   / 2017 நவம்பர் 17 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

2017ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரிட்சையில் சித்திபெற்ற மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுக்கு, பணம் கொடுக்கத் தவறிய மாணவியை, அந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என, நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்ததாகவும் இதனால், மாணவி ஒருவர் நேற்றைய தினம் பாடசாலைக்கு செல்வதை தவிர்த்தக்கொண்டதாகவும் தெரியவருகிறது.

ஹட்டனிலுள்ள பிரபல பெண்கள் கல்லூரியில், புலமைப்பரிசில் பரிட்சையில் சித்திபெற்ற மாணவிகளை கௌரவிக்கு நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதன்போதே, இந்நிகழ்வுக்கு பணம் செலுத்தாத மாணவி ஒருவர் புறக்கணிக்கப்பட்டாரென தெரியவருகிறது.
மேற்படி கல்லூரியில் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவிகளை பாராட்டி கௌரவிப்பதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இதற்காக 100 புள்ளிகளுக்கும் அதிகமாக பெற்ற மாணவிகளிடம் 2,000 ரூபாயையும் 100 புள்ளிகளுக்கும் குறைவாக பெற்ற மாணவிகளிடம் 1,000 ரூபாயையும் நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு பெற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்நிகழ்வுக்கு கட்டணம் செலுத்தத் தவறிய தன்னை, இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என ஆசிரியர் ஒருவர் கூறியதாக, மேற்படி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு,   பாடசாலைக்கு செல்வதைத் தவிர்த்துக்கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில், குறித்த நிகழ்வின் ஏற்பாட்டு குழு ஆசிரியரிடம் கேட்ட போது, தாங்கள் அவ்வாறு எந்த மாணவியிடமும் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “2017ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசிலில் சித்தியடைந்த சித்தியடையாத அனைத்து மாணவிகளையும் கௌரவிப்பதற்காக நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தோம்.

இந்நிகழ்வை நடத்துவதற்காக மாணவிகளிடம் இருந்து பணத்தை வசூலித்தது உண்மைதான். ஆனால், பணம் கொடுக்க முடியாத மாணவிகளை, எமது சொந்த செலவில் கௌரவிக்க ஏற்பாடு செய்துள்ளோம். அந்தப் பணத்தை பகுதி பகுதியாக செலுத்துமாறு நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். ஆனால் எந்த மாணவியையும் நிகழ்வில் கலந்துகொள்ள ” வேண்டாம் என, நாங்கள் கூறவில்லை” என்றார்.

குறித்த கல்லூரியில் தமிழ்மொழியில் 16 மாணவிகளும் சிங்கள மொழியில் 2 மாணவிகளும் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்திபெற்றுள்ளனர். எனினும், புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்றைய தினம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .