2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பணி நீக்கம் செய்த தொழிலாளியின் நிலுவைச் சம்பளத்தை வழங்குமாறு உத்தரவு

எம். செல்வராஜா   / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைவிடப்பட்டிருந்த கட்டடத்துக்குள் குடியேறிய குற்றச்சாட்டுக்காக தோட்ட நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு, வேலை நீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கான நிலுவைச் சம்பளத்தை வழங்குமாறு, பதுளை தொழில் நீதிமன்றத் தலைவர் கே. எம்.ஜே.பி சமரசிங்க, இன்று (17) உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

அத்துடன், தோட்டத் தொழிலாளர்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு, தோட்ட முகாமைத்துவத்துக்கு இருந்து வருகின்றது.

அப்பொறுப்பைத் தவறவிட்டு, தொழிலாளியை வேலை நீக்கம் செய்வது முறையற்றதாகும். அத்துடன், தொழிலாளி ஒருவர் அத்துமீறி பெருந்தோட்ட கட்டடத்தில் குடியேறுவாராயின், அவரை வேலை நீக்கம் செய்வது, மனிதாபமானமற்ற செயலாகும் என்றும் நீதிமன்றத் தலைவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.   

லுணுகலை பகுதியின் ஹொப்டன் தோட்டத்தைச் சேர்ந்த பொன்னையா கர்ணன் என்பவரே, தான் பணி நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்து, தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.  

கடந்த 1989ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து தோட்டத் தொழிலாளியாக இருந்து வரும் குறித்த தொழிலாளி திருமணம் செய்து மூன்று பிள்ளைகளுடன் குடியிருப்பு வசதியின்றி 15 பேருடன் இருந்து வரும் பெற்றோருடனேயே லயன் குடியிருப்பில் வாழ்ந்து வந்தார்.   

குடியிருப்பில் இடவசதி போதாமையால், குறித்த தொழிலாளி, தோட்ட முகாமைத்துவத்திடம் கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்த போதிலும், அக்கோரிக்கைகள் செவிமடுக்கப்படவில்லை.

அதனால் தோட்டத்தில் கைவிடப்பட்டிருந்த கட்டடமொன்றில் தற்காலிகமாக குடியேறினார்.   
அதனை ஆட்சேபித்து தோட்ட முகாமைத்துவம் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி பொன்னையா கர்ணனை வேலை நீக்கம் செய்தது. இதற்கெதிராகவே பதுளை தொழில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.   

இந்நிலையில், மேற்படி பிணக்கு, பதுளை தொழில் நீதிமன்றில் நீதிமன்ற தலைவர் கே. எம். ஜே.பி சமரசிங்க முன்னிலையில் இன்று (17) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, நீதிமன்ற தலைவர் இவ்வாறு உத்தரவிட்டார்.  

அவர் தொடர்ந்து தனது தீர்ப்பில் கூறியதாவது,  

“தோட்டத்தை நம்பியே தொழிலாளர் குடும்பம் வாழ்ந்து வருகின்றது. அக்குடும்பத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகளை, மனித நேயத்துடன் மேற்கொள்ள வேண்டியது தோட்ட முகாமைத்துவத்தின் பொறுப்பாகும். இப்பொறுப்பில் இருந்து விலகிச் சென்று, தொழிலாளியை வேலையில் இருந்து நீக்குவதென்பது, மனித நேயத்துக்கு அப்பாற்பட்டதாகும். கைவிடப்பட்டிருந்த கட்டடத்துக்குள் அத்தொழிலாளர் குடும்பம் பிரவேசித்தமையின் பின்னணியை, ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  

“அத்துடன், கட்டடமொன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்தமைக்கு, வேலை நீக்கம் தக்க பரிகாரமாகாது. குறிப்பிட்ட கட்டடத்தை மீளவும் பெற்றுக்கொள்வதற்கு, வேறு வழிகள் இருப்பதால், தோட்ட முகாமைத்துவம் அதனைப் பின்பற்றியிருக்க வேண்டும்.  

“இத்தொழிலாளர் குடும்பத்தினர், 24 வருட காலமாக வீடின்றி வாழ்ந்து வந்துள்ளனர். இக்குடும்பத்தினருக்குக் குடியிருப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அடிப்படை விடயமாகும். இதை விடுத்து, அத்தொழிலாளியை வேலை நீக்கம் செய்வது குற்றமாகும்.   

“தொழிலாளி விடுத்த கோரிக்கையைப்  பல வருடங்களாக செவிமடுக்கப்படாத போதிலும், அத்துமீறி கட்டடமொன்றுக்குள் பிரவேசித்த தொழிலாளிக்கு எதிராக தோட்ட முகாமைத்துவம் அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்தமை போன்று, தொழிலாளி முன்வைத்த கோரிக்கைக்கும் விரைவாகத் தீர்வைப் பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.   

“எனவே, வேலை நீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கான நிலுவைச் சம்பளம், ஏனைய கொடுப்பனவுகள் உள்ளிட்ட வேறு வழங்கப்பட வேண்டிய நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு, பாதிப்படைந்திருக்கும் தொழிலாளிக்கும் அவரது குடும்பத்துக்கும் எந்தத் தடைகளும் இருக்கக் கூடாது” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .