2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பதுளை மக்களுக்கு எச்சரிக்கை

Editorial   / 2017 டிசெம்பர் 22 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிஸாந்த குமார

பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதுளை மாவட்டத்தில், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளிலுள்ள மக்களை, அவசர நிலைமைகள் ஏற்படும்போது, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

பதுளை மாவட்டத்தில்,   செவ்வாய்க்கிழமை (19) நள்ளிரவு முதல் இடைவிடாது பெய்துவரும் அடை மழை காரணமாக, பசறை- மடுல்சீமை வீதி, குருவிகொல தோட்டத்துக்கு அருகில் உள்ள அம்பலம் எனும் இடத்தில், பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததால் அவ்வீதி வழியான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் பொலிஸார், பொதுமக்களின் உதவியுடன் மண் அகற்றப்பட்டு போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்தச் சம்பவம் புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தொடர்ச்சியான மழை காரணமாக, பதுளை, பண்டாரவளை, வியலுவ உள்ளிட்ட பகுதிகளில், மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, மேற்படி நிலையம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.  

பிரதான வீதிகளில் பனிமூட்டம் நிறைந்து காணப்படுவதால், வாகன சாரதிகள் மிகுந்த சிரமத்துடனேயே வாகனத்தை செலுத்து வருகின்றனர். எனவே, அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்வதற்காக, வாகனங்களின் முன்விளக்குகளை ஒளிரவிட்டுச் செல்லுமாறு, வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

பதுளை-மஹியங்கனை வீதி, பிடபொல சந்தியில் மண்திட்டு சரிந்து விழுந்ததால், அவ்வீதி வழியான போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .