2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாடசாலை வவுச்சர்களில் ஊழல்

Editorial   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டம், வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த கல்வி வலயத்துக்கு உட்பட்ட தமிழ் மொழிமூல (ஒருசில பாடசாலைகளைத் தவிர) பாடசாலைகளின் மாணவர் சீருடை விநியோகத்தில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவச சீருடைகளுக்கு வவுச்சர் வழங்கும் நடைமுறையை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, மாணவர்களுக்கு அதற்கான வவுச்சர்களும் வழங்கப்பட்டுள்ளன.

 

வவுச்சர்களுக்கு சீருடை பெற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தக நிலையங்கள் தொடர்பிலும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இரு கல்வி வலயங்களுக்கும் உட்பட்ட சில தமிழ் மொழிமூல பாடசாலைகளில் மாணவர்களின் வவுச்சர்கள் அதிபர்கள், ஆசிரியர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு பதிலாக மாணவர்களுக்கு நேரடியாக சீருடைத் துணிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

குறித்த சீருடை துணிகள் தரம் குறைவானதாக காணப்படுவதாகவும், பெரும்பாலான மாணவர்கள் வவுச்சர்களுக்கு பதிலாக நேரடியாக சீருடைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் குறித்த இரு கல்வி வலயங்களிலும் அமைந்துள்ள ஒருசில பாடசாலைகள் இந்த நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்களை அவர்களிடமே கையளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த விடயமானது மாணவர்களின் உரிமைகளை மீறும் செயல் எனவும், இந்தச் செயற்பாடு மூலம் மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகத்தை வைத்து இலாபம் சம்பாதிக்கும் செயற்பாட்டில் அதிபர்களும் ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் பாடசாலை சீருடை வவுச்சர்களை அபகரிக்கும் வகையில் அதிபர்களோ, வர்த்தகர்களோ பெற்றோர்களை வற்புறுத்தக்கூடாது என கல்வியமைச்சு கடந்த மாதம் 30ஆம் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது. 

அதேவேளை பாடசாலைச் சுற்றாடலில் எந்தவொரு நபரோ வர்த்தகரோ சீருடைகள் விற்பது, அதற்காக பிரசாரம் செய்வதும் தடைசெய்யப்பட்டிருந்தது. 

எனினும், வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த கல்வி வலயத்துக்கு உட்பட்ட குறித்த தமிழ்மொழி மூல பாடசாலைகளில் சீருடை விநியோகத்தில் வெளிநபர்களின் தலையீடு காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. 

வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய “சீருடைக்கான வவுச்சர் மாணவர்களிடம் கையளிக்கப்பட வேண்டுமே தவிர அதிபர்களோ அல்லது அதிகாரிகளோ சீருடை பெற்றுக் கொடுப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் சீருடைக்காக அதிபர்களோ அல்லது அதிகாரிகளோ சீருடை கொள்வனவுக்கான நிறுவனங்களை அல்லது நபரை சிபாரிசு செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. 

சில பிரதேசங்களில் சீருடை பெற்றுக்கொள்வதற்கு கடைகள் இல்லாத நிலை தொடர்பில் கல்வியமைச்சுக்கு முறைப்பாடுகள் வந்துள்ளன. இதற்கிணங்க ‘சலுசல’ நிறுவனத்திற்கு இத்தகைய பிரதேசங்களில் சீருடை பெற்றுக்கொடுக்க கல்வியமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும் கண்டிப்பாக ‘சலுசல’யில் தான் சீருடை கொள்வனவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை கல்வியமைச்சு வெளியிடவில்லை. 

இது தொடர்பில் முறைப்பாடுகள் செய்யவிரும்புவோர் கல்வியமைச்சின் விரைவான தொடர்புக்காக 1988 இலக்கத்தை உபயோகிக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .