2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பார்க் தோட்டத்தில் சட்டவிரோத மதுவிற்பனை 100 கையெழுத்துகளுடன் மகஜர்

ஆ.ரமேஸ்   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட கந்தப்பளை, பார்க் தோட்டத்தில், சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனை ​முன்னெடுக்கப்பட்டு வருவதாக, ​தோட்ட மக்கள், நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ்ஜின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.  

இது தொடர்பாக, தேயிலை மலைத் தோட்டத்திலுள்ள 100க்கும் மேற்பட்டவர்களால் கையொப்பம் இடப்பட்ட மகஜர், நேற்று (24), தவிசாளரின் உத்தியோகப்பூர்வ காரியாலயத்தில், கையளிக்கப்பட்டது.  

அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

தங்களது தேயிலை மலைத்தோட்டத்தில், நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக, கந்தப்பளை பொலிஸாருக்கு அறிவித்துள்ள போதிலும் இதுவரைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனால், ​​போதைக்கு அடிமையாவோர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுகின்றனர் என்றும் இங்கு, மது அருந்துவதற்கென, வெளியிடங்களில் இருந்து, இரவு நேரங்களில் அநேகமானோர் வந்து செல்வதாகவும் மது அருந்திய பின்னர் ஏற்படும் குழப்பங்கள், கூச்சல்கள் காரணமாக, பெண்களும் பாடசாலை மாணவர்களும் வயதானவர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்றும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதேவே​ளை, போதைப்பொருள் பாவனையும் இப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் இதனால், பாடசாலை மாணவர்களின் எதிர்காலம் சீர்கெட்டு விடும் என்று தாம் அஞ்சுவதாகவும் குறிப்பிட்டுள்ள அம்மகஜரில், தோட்டத்திலுள்ள பெண் பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.  

இந்த விடயத்தில் தோட்ட மக்கள் நேரடியாகத் தலையிட்டு, தீர்வை எட்ட முடியாத நிலை காணப்படுவதாலேயே, பிரதேச சபை தவிசாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.  

மகஜரைப் பெற்றுக்கொண்ட பிரதேசசபை தவிசாளர் வேலு யோகராஜ், இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தொடர்பாக, கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசோக்க ரணபாகுவின் கவனத்துக்குக் கொண்டுவந்த போதிலும், கடந்த காலங்களில் உரிய நடவடிக்கை எடுக்காதமையால், தனக்கும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் முரண்பாடு ஏற்பட்டது என்றும் கூறிய அவர், எனவே, இது தொடர்பில், நுவரெலியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, மாவட்ட அதிரடி படை அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .