2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு ‘ஜெனீவா போவோம்’

Editorial   / 2018 ஜனவரி 19 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

“இலங்கையில், மலையக பெருந்தோட்ட மக்கள் முகம் கொடுக்கின்ற உரிமை மீறல்கள் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு, ஜெனீவா மனித உரிமை பேரவைக்குச் செல்​வோம்” என இலங்கைக்கான சர்வதேச செயலணி அமைப்பின் தகவல் பொறுப்பதிகாரி தேசகீர்த்தி கே.கே.சுனில்குமார தெரிவித்தார்.  

நுவரெலியா கூட்டுறவுச் சங்க விடுதியில், இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பிலான விழிப்புணர்வு பயிற்சி மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையி​லேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

“மலையக மக்கள், மனித உரிமை மீறல்களுக்கு கூடுதலாக முகம்கொடுத்து வருகின்றனர். கல்வி, சுகாதாரம், வீட்டுரிமை, காணியுரிமை உள்ளிட்ட விடயங்களில், பல்வேறான மீறல்களுக்கு அவர்கள் முகங்கொடுக்கின்றனர்” என்றார்.   

“இரண்டாம் உலகப் போரின்போது  ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமை மீறல் அமைப்பானது, இன்று உலக ரீதியில் தனது சேவைகளையும் உதவிகளையும் செய்து வருகின்றது“ என்றார்.  

“இலங்கையில், வடக்கு, கிழக்கு மக்களுக்கு அடுத்தப்படியாக மலையக பெருந்தோட்ட தமிழ் மக்களும் மனித உரிமை மீறலுக்கு பாரியளவில் முகம் கொடுத்து வருகின்றனர்” என்றார்.  

“இவ்வாறு முகம் கொடுத்து வரும், மலையக பெருந்தோட்டத்துறை​யைச் சேர்ந்த மக்கள், மனித உரிமை மீறல் தொடர்பில் போதிய விழிப்புணர்வு இல்லாமலே இருக்கின்றனர். தங்களுக்கு எதிரான, மனித உரிமை மீறல்களை அவர்கள் வெளிக்கொணர்வதே இல்லை” என்றார்.  

அரசாங்கம் திணைக்களங்களில் பெற்றுக்கொள்ளப்படும் சேவைகளிலும் அம்மக்கள் உரிமை மீறல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.   

“எனவே, மனித உரிமைகள் சட்டம் சரத்தில், நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் சமமாக வழிநடத்திட வேண்டும்.  

அவர்களுக்கான உரிமைகள் சமமாக்கப்பட வேண்டும் உரிமைமீறல்கள் இடம்பெறக்கூடாது என்றெல்லாம் கூறப்படுகின்றது.  

ஆனால், அரசாங்கத்தின் வழிநடத்தலில் மக்களுக்கு பொதுச்சேவைகளை செய்துவரும் அனைத்து திணைக்களங்களும் அவர்களின் வேலைகளை இலகுவாக்கி கொள்ளவென உரிமைமீறல்களில் அதிகமாக ஈடுப்படுவதை காணக்கூடியதாய் உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

“இலங்கையில் இயங்கும், மனித உரிமைகள் மீறல் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்கும் அமைப்புகள், வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்களின் பிரச்சினைகள் ஜெனீவா வரை கொண்டுச் சென்றுள்ளன.  

“வடக்கு, கிழக்கு மக்கள் நீதியைத் தேடி எவ்வாறு செல்கின்றனரோ, அதேபோல, மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் நீதித்தேடி, ஜெனீவா வரையிலும் செல்லவேண்டும்” என்றார்.  

“இதற்காக, நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடிப்படை உரிமை மீறல்கள் ஆகியனவற்றை, கண்காணிப்பதற்கு, 13 பேர் கொண்ட ஒரு செயலணி படை, ஹட்டனில் உருவாக்கப்பட்டுள்ளது.  

“இவர்கள் ஊடாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்டப்பகுதிகளுக்கும் இதன் செயற்பாடுகள் சென்றடையும். இதன்போது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைமீறல் தொடர்பில் இம்மக்களும் தெளிவுப்படுத்தப்படும்” என்றார்.  

“அதேவேளையில், இந்த மலையக சமுகத்தில் தோட்டப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் உரிமைமீறல்கள் தொடர்பிலான பிரச்சினைகளை ஒன்று திரட்டி, இப்பிரச்சிகளை ஜெனீவாவரை கொண்டுச் செல்லவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .