2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புதிய அமைச்சரவை மாற்றத்துக்குக் கண்டனம்

Kogilavani   / 2018 பெப்ரவரி 26 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்காது, அரசாங்கம் சர்வதிகாரப்போக்கில் செயற்பட்டு வருகிறது எனச் சாடியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெ.பிரதீபன், புதிய அமைச்சுப் பதவிகளை வழங்கியமையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

ஹட்டனில், இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் பின்னர், மக்களின் ஆனைக்கமைய புதிய, ஊழலற்ற அரசாங்கம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது என்று தெரிவித்த அவர், மாறாக, ஊழல் நிறைந்த, மக்கள் நிராகரித்த அரசியல்வாதிகளுக்கே மீண்டும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் குற்றஞ்சாட்டினார்.

“ஜனாதிபதியின் தலைமையில் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமையினூடாக புதிய அரசாங்கம் உருவாகும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஊழல் நிறைந்த நல்லாட்சியைத் தொடர ஜனாதிபதி வழியமைத்துக் கொடுத்துள்ளமையானது, மக்களின் தீர்ப்புக்கு எதிரானதாகவே கருதவேண்டியுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

"மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, சட்டமும் ஒழுங்கும் அமைச்சுப் பதவியை வழங்கியமையை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று குறிப்பிட்ட அவர், ஊழல்வாதிகளைக் காப்பாற்றுவதற்காகவா இந்த அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.

எதிர்வரும் வாரத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு, புதிதாக அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த அமைச்சுப்பதவிகளை, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றும், ஊழலற்ற, திருடர்கள் அற்ற தனியான அரசாங்கத்தை அமைக்க, ஐனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X