2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘புஸ்பா’ நம்பிக்கை நட்சத்திரம்

Editorial   / 2018 ஜனவரி 15 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்சிக்கும் சமூகத்துக்கும் விசுவாசம் மிக்கவரும், மக்களுக்காக, சேவையாற்றக்கூடிய ஒருவரையே, கொட்டகலை பிரதேச சபைக்கு வேட்பாளராகத் தெரிவு செய்துள்ளோம். இந்நிலையில், எதற்காகவும் எவரும் அச்சம் கொள்ளவேண்டியதில்லை​” என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், இராஜாங்க கல்வி அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிடும், மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளரும் அரசியல் உயர்பீட உறுப்பினரும் வேட்பாளருமான புஸ்பா விஸ்வநாதனை ஆதரித்து, கொட்டகலை - வூட்டன் தோட்டத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தில் மிக முக்கிய பங்குதாரர்களாக தமிழ் முற்போக்குக் கூட்டணி திகழ்ந்தது. ஐக்கிய தேசியக் கட்சியுடனான இணைவுக்குப் பின்னர், மலையகத்தில் பாரிய மாற்றங்களை எம்மால் மேற்கொள்ளமுடிந்தது. எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். அமைச்சர் ப.திகாம்பரம் ஊடாக தோட்ட வீடமைப்புத் திட்டம், காணி உரித்துடன் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல், அமைச்சர் மனோ கணேசன் ஊடாக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

“கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களை, பிரதேச சபைத்தேர்தலுக்கு வெறும் வாக்காளர்களாகவே பயன்படுத்தி வந்தனர். அந்த நிலைமையை மாற்றி, இன்று தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் பெருமளவில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவதோடு, பிரதேச சபைகளின் எண்ணிக்கையை, நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்திருக்கின்றோம். தோட்டத்தொழிலாளர்களுக்கு பெருமளவு சேவையை பிரதேச சபைகளூடாக செய்யக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம். இந்த வரலாற்று வெற்றியுடனேயே தமிழ் முற்போக்குக் கூட்டணி இந்தத் தேர்தலில் இறங்கியுள்ளது. அத்துடன், இந்த அரசாங்கம், 2020 வரை ஆட்சியில் இருக்கும். எனவே, எதிர்வரும் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்” என்றார். 

வேட்பாளர் புஸ்பா உரை 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட வேட்பாளர் புஸ்பா விஸ்வநாதன் உரையாற்றுகையில்,  

“மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் அரசியல் கொள்கையில் ஈர்க்கப்பட்டு, தடம் மாறாமல் 1989ஆம் ஆண்டு முதல் கடந்த 27 ஆண்டுகளாக செயற்பட்டதன் விளைவாகவே, இன்று தொழிற்சங்கத்தின் நிதிச் செயலாளராகவும் அரசியல் உயர்பீட உறுப்பினராகவும் வளர்ந்துள்ளேன். 

“எனவே, எத்தகைய மாற்றுக்கருத்தையும் சந்தேகங்களையும் பொருட்படுத்தவேண்டிய அவசியம் இன்றில்லை. எனது வெற்றியை தடுப்பதற்கும் என்னை முடக்குவதற்கும் மேற்கொள்ளப்படும் போலிப்பிரசாரங்களுக்கு நான் அஞ்சப்போவதுமில்லை.  

“இருக்கமான சவாலான தருணங்களில் கூட கட்சியின் நலனுக்காக செயற்பட்டு வந்திருக்கின்றோம். எனவே, மக்கள் குழப்பமடையத்தேவையில்லை. 

 “எமது பிரதேசத்துக்கு அமரர் சந்திரசேகரன் காலம் தொட்டு அவரது அமைச்சின் நிதியிலும் எனது சொந்தப் பணத்திலும் சமூகத்துக்கான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தேன். அரசியலுக்கும் சமூக சேவைக்கும் நான் புதிய வரவு கிடையாது.  

“இத்தேர்தலில், எனக்கு கிடைக்கும் சமூக அங்கிகாரம், இப்பகுதியின் அபிவிருத்தியை, சமூக சேவையை மேலும் துரிதப்படுத்தும். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைகளான இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், அமைச்சர் ப.திகாம்பரம், அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இப்பிரதேச அபிவிருத்தியை முன்னெடுப்போம்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .