2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பெயர்மாற்றப்பட்ட விவகாரம் 'திரிபுப்படுத்தப்பட்டுவிட்டது'

Kogilavani   / 2017 நவம்பர் 21 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோர், ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர்மாற்ற விடயம் மற்றும் இலங்கை அரசியில் நிலவரம் என்பவைத் தொடர்பில், இந்தியா, தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த விஜயத்தின்போது, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்ற விவகாரம் தொடர்பில், இந்தியா, தமிழ் நாட்டின் அரசியல் பிரமுகர்கள், கண்டனம் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துவதாகவே, அமைச்சர் திகாம்பரத்தின் இந்திய விஜயம் அமைந்திருந்ததாக, அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்திப்புகள் தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கையில் தேசியத் தலைவராக அங்கிகரிக்கப்பட்டவர். அவருக்கு இலங்கையின் பழைய நாடாளுமன்ற முன்றலில் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன், தற்போதைய நாடாளுமன்றத்தில் திருவுருப்படமும் வைக்கப்பட்டு, இலங்கை அரசின் பிரதிநிதிகள் கௌரவம் அளித்து வருகின்றனர்.

“இந்நிலையில், ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர்மாற்ற விடயமானது, தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு திரிபுபடுத்தப்பட்டு விபரிக்கப்பட்டுள்ளது.

“சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் குறிப்பிட்ட நான்கு நிறுவனங்களையும் நிர்வகிப்பவர்கள், சௌமியமூர்த்தி தொண்டமான் என்பதற்கு பதிலாக, தொண்டமான் எனும் பெயரிலேயே நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். தொண்டமான் என்ற பெயருடனேயே, அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சி, தமது குடும்ப அரசியலை முன்னெடுத்து வருகின்றது.

“எந்த இடத்திலும் சௌமியமூர்த்தி தொண்டமான் எனும் பெயர் நீக்கப்படவில்லை. அவர் பெயரிலான மன்றம் இயங்குவதில் இலங்கை அரசு எவ்விதத் தடங்களையும் எற்படுத்தவில்லை.

“தமிழ்நாட்டு அரசியல் சூழலில், சிங்கள அரசு என பரப்புரை செய்வதன் ஊடாக, அங்கு ஏற்கெனவே நிலவும் தமிழுணர்வு சூழல் அரசியலாக்கப்பட்டு வருகிறது. இது இலங்கையில் சிங்கள, முஸ்லிம் மக்களுடன் இரண்டறக்கலந்து வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு, அச்சுறுத்தலான சூழ்நிலையை இலங்கையில் தோற்றுவிக்கக்கூடும்.

“எனவே, தமிழகத் தலைவர்களிடம் சிங்கள அரசு என்ற மனநிலை மாற்றப்படுதல் வேண்டும். இலங்கையில் ஆட்சி நடத்துவது இலங்கை அரசேயன்றி, அது சிங்கள அரசு என சொல்லப்படுவதில்லை.

“பெயர்மாற்ற விடயம் தொடர்பில் தமிழகத் தலைவர்களிடம் முறைப்பாடு செய்த மலையகத் தமிழ்க்கட்சியும்கூட, அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்று, இரண்டு மாகாண அமைச்சுகளை தன்வசம் வைத்துள்ளது. அத்துடன், நாடாளுமன்றில் இரண்டு ஆசனங்களைக் கொண்டு ஆளும் தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வருகின்றது.

“மலையகத்தில் செயற்படக்கூடிய அரசியல் கட்சிகளுக்கிடையே அரசியல் போட்டிகள் காரணமாக இந்த பெயர் மாற்றப்பிரச்சினை தூக்கிப்பிடிக்கப்படுகின்றதேத் தவிர, இலங்கை அரசியலில் தேசிய ரீதியாக அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயருக்கு எந்த அபகீர்த்தியும் ஏற்படவில்லை.

“அன்னாரின் பெயரில் உருவாக்கப்பட்ட சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம், நாடாளுமன்றில் கூட்டிணைக்கப்பட்ட சட்டத்தின்படி அந்த மன்றத்தை அவர்களது பரம்பரை உறவுகளும் அவர்களது கட்சியும் தமது நிதியில் கொடை நிறுவனமாக கொண்டு நடத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை.

“அத்தகைய மன்றத்தின் கீழ், அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களே, குறித்த நிறுவனங்கள் நான்கும் அது உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்த பெயரில் தொடர்ந்து இயங்குமாறு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படியே இப்போது இயக்கப்பட்டு வருகின்றது.

“மன்றத்தின் பெயரில் இடம்பெற்றதாகச் சொல்லப்படும் நிதி ஊழல் மோசடிகள் பற்றிய விசாரணைகள், விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையிலும், அரசியல் நோக்கத்துடன் தமிழக ஊடகங்களைக் கையாண்டு உணர்வுகளைத் தூண்டும் விதமாக, இவ்விவகாரம் கையாளப்பட்டுள்ளது.

“எனவே, மலையக மக்களின் நிலைமைகளை நேரடியாகக் கண்டறிவதற்காக, அறிக்கைவிட்ட இந்திய அரசியல் தலைவர்கள் மலையகத்துக்கு விஜயம் செய்ய வேண்டும் என அழைப்புவிடுக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “தமது தெளிவுபடுத்தலை செவிமடுத்த தமிழக அரசியல் தலைவர்கள், தமக்கு ஒருபக்கச் சார்பாகவே இந்த செய்தி கூறப்பட்டதாகவும் சிங்கள அரசு இத்தகைய காரியத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதால், உணர்ச்சி மேலோங்கி தமிழுணர்வுடன் தமது அறிக்கைகளை வெளியிட்டதாகவும் தமிழகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சினை பொருத்தமற்றவகையில், இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதை போல் உணர்வதாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தம்மிடம் தெரிவித்தனர் என்றும், அமைச்சர் திகாம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .