2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பெறுபேறுகளை அதிகரிக்க விசேடத் திட்டம்

Kogilavani   / 2017 ஜூன் 27 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில், நுவரெலியா மாவட்டத்தில், கணித, விஞ்ஞான, ஆங்கில பாடங்களின் பெறுபேறுகளை அதிகரிக்கும் நோக்கில், விசேட நிகழ்ச்சித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதற்கமைவாக, மேற்படி பாடங்களுக்கான இலவச வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாகவும், கேம்பிரிஜ் நிதியத்தின் ஊடாகவே, இவ்விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான கலந்துரையாடல், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில், நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், கேம்பிரிஜ் நிதியத்தின் தலைவரும் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான அனுசரணையாளருமான வி.முத்துசாமி, இந்தத் திட்டத்தின் பிரதான இணைப்பாளர் எம்.இந்திரஜித் உட்பட, நுவரெலியா மாவட்ட கல்வித்திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதனடிப்படையில், நுவரெலியா மாவட்டத்தில் அதாவது ஹட்டன், கொத்மலை, வலப்பனை, ஹங்குரங்கெத, நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 29 நிலையங்களில், சனி,ஞாயிறு ஆகிய தினங்களில் இலவச வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

எதிர்வரும் 15ஆம் திகதி இவ்வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன. இதற்காக இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கேம்பிரிஜ் நிதியத்தின் தலைவரும் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான அனுசரணையாளருமான வி.முத்துசாமி வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.

இந்த வகுப்புகள் தொடர்பான வளவாளர்களுடனான முதலாவது கலந்துரையாடல் எதிர்வரும் 9ஆம் திகதி, தலவாக்கையில் நடைபெறவுள்ளது.

இலவச வகுப்புகள் எதிர்வரும் நவம்பர் மாதம்வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. மேலதிக வகுப்புகள் மூலமாக 6,000 க.பொ.த மாணவர்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2018 முதல், தரம் 8,9,10 ஆகிய மாணவர்களுக்கும் இந்த இலவச வகுப்புகளை நடத்த தீர்மானித்திருப்பதாக, இதன் பிரதான அனுசரணையாளரும் கேம்பிரிஜ் நிதியத்தின் தலைவருமான வி.முத்துசாமி தெரிவித்தார்.

இதன்மூலமாக, “க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளை அதிகரித்து, உயர்தரத்துக்கு கணித, விஞ்ஞான பாடங்களை கற்பதற்கான மாணவர்களின் தொகையை அதிகரிப்பதே, எனது நோக்கம்” எனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .