2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

போராட்டம் நிறைவுக்கு வந்தது

Editorial   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

உடபுஸ்ஸல்லாவை பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான உடபுஸ்ஸல்லாவ எனிக் தோட்டத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (02) முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம், நேற்று (07) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்பு நிறைவடைந்துள்ளதாக, மலையகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டப் பொறுப்பாளர் பி.மதிவாணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"உடபுஸ்ஸல்லாவை எனிக் தோட்டத்தில், கடந்த 02ஆம் திகதி முதல் தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக, அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று, தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

தோட்டத்தில் வழமையாக  இயங்கி வந்த தோட்டக் காரியாலயம், ஒல்டிமார் தோட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்தே, இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்காரணமாக, தொழிலாளர்கள் தங்களுடைய அன்றாடத் தேவைகளுக்காக பல மைல் தூரம் நடந்து சென்று, காரியாலயத்தில் தங்களுடையத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய ஒரு நிலை ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டியே, இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று (07) நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தோட்ட அதிகாரி அசேல ரத்நாயக்க, உதவி தோட்ட அதிகாரி, தொழிலாளர் தேசிய சங்கம், மலையக தொழிலாளர் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகிய தொழிற்சங்கங்களும் கலந்துகொண்டன.

இதன்போது, தோட்டத்தில் இயங்கி வந்த காரியாலயத்தை, தொடர்ந்து எனிக் தோட்டத்தில் இயங்கச் செய்வது எனவும் தொழிலாளர்கள் அடையாள வேலை நிறுத்தத்தை கைவிடுவது எனவும், மீண்டும் ஒரு மாத காலத்தில், பேச்சுவார்த்தை மூலமாக ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எனவும் தீர்மானிக்கப்பட்டதையடுத்து, இன்று முதல் தொழிலாளர்கள் வழமையாக வேலைக்குத் திரும்புவார்கள்” என பி.மதிவாணன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X