2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

’மக்களின் கருத்துகளுக்கும் இடமுண்டு’

மொஹொமட் ஆஸிக்   / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இனங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழுவானது, பாரிய அளவில் தமது வேலைத்திட்டங்களை ஆரம்பித்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய சபாநாயகர் கரு ஜயசூரிய, இந்தக் குழு, மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், எதிர்காலத்தில் இந்தக் குழு, பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டறியும் என்றும் தெரிவித்தார்.

மேற்படி குழுவின் முதலாவது பிராந்திய மாநாடு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், கண்டி மஹாவலி ரீச் ஹோட்டலில், நேற்று (06) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறுத் தெரிவித்தார்.

இங்குத் தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில், நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட சில அசம்பாவிதங்கள் காரணமாகவே, இவ்வாறான ஒரு நாடாளுமன்றக் குழுவை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்தக் குழுவை அமைப்பதற்கு, அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கினர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தக் குழு மிகவும் சக்தி வாய்ந்தது எனத் தெரிவித்த அவர், இதற்கு சட்ட ரீதியான அதிகாரங்களும் உண்டு எனவும், எதிர்காலத்தில் இந்தக் குழு பொதுமக்களிடம் இருந்தும் கருத்துகளை கேட்டறியும் என்றும் தெரிவித்தார்.

இனங்களுக்கு இடையில் சகவாழ்வு இல்லாவிட்டால், நாட்டின் அபிவிருத்தியை அது பாதிக்கும் என்றுச் சுட்டிக்காட்டிய அவர், எனவே மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து, இனங்களுக்கு இடையில் சகவழ்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும், இதற்காக நாட்டின் அனைத்துத் தரப்பினரினதும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று, மக்களின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது, சகவாழ்வும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .