2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மத்திய அரசாங்கத்தின் குழப்பங்களால் ’ஆட்சி அமைப்பதில் இழுபறி’

Editorial   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சிக்குப் போதிய ஆசனங்கள் தமக்கு உள்ளன எனத் தெரிவித்துள்ள, பதுளை மாநகர சபையின் மேயர் பதவிக்கு, அக்கட்சியால் தெரிவுசெய்யப்பட்டுள்ள எம்.டி.டி ஹேமச்சந்திர, மத்திய அரசாங்கத்தில் நிலவும் இழுபறி காரணமாக, தாம் ஆட்சியமைப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

அவரின் வாசஸ்தலத்தில் நேற்று முன்தினம் (22) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், "அடுத்த மாத முதல் வாரத்தில், பதுளை மாநகர சபையில் ஆட்சி அமைக்கப்பட்டு விடும். இந்த ஆட்சி, ஐக்கிய தேசியக் கட்சியால், தனித்தே அமைக்கப்படும். எனினும், மத்திய அரசாங்கத்தில் ஏற்பட்டிருக்கும் இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பின்னரே, எந்தவொரு விடயத்தையும் உறுதியாகக் கூறமுடியும். மத்திய அரசாங்கத்தால், கூட்டாட்சி மீண்டும் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், பதுளை மாநகர சபையிலும் கூட்டாட்சியே மேற்கொள்ளப்படும்” என்றார்.

25 ஆசனங்களைக் கொண்ட பதுளை மாநகர சபையில், ஐ.தே.கவுக்கு 9 ஆசனங்கள் உள்ளன. இது, அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 13 ஆசனங்களை விட, 4 ஆசனங்கள் குறைவாகும். எனவே, ஐ.தே.கவால் மாத்திரம், தனித்து ஆட்சியமைப்பது எந்தளவுக்குச் சாத்தியமானது என்பது கேள்விக்குறியே.

மறுபக்கமாக, பொதுஜன பெரமுனவுக்கு 8 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4 ஆசனங்களும் காணப்படும் இச்சபையில், 3 ஆசனங்களைக் கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), எந்தக் கட்சிக்கும் கூட்டணிக்கும் ஆதரவு வழங்காது ஏற்படாது என்ற அடிப்படையில், தொங்கு நிலையே நீடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மேயராக யார் தெரிவுசெய்யப்பட வேண்டுமென்றாலும், ஜே.வி.பியின் ஆதரவைப் பெற வேண்டிய தேவை உள்ளமை, இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமது கட்சியின் ஆட்சி அமைக்கப்பட்டால், தொழிலுக்குச் செல்லும் பெற்றோரின் பிள்ளைகளைப் பராமரிக்க, பகல்நேர பிள்ளை பராமரிப்பு நிலையமொன்று ஸ்தாபிக்கப்படும் என்று கூறிய அவர், ஆங்கில மொழியிலான முன்பள்ளியொன்றும் அமைக்கப்படும் என்றும் கூறினார். பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கின் பார்வையாளர் பிரிவை, அனைத்து வசதிகளுடனாக மாற்றியமைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், மாநகரின் வர்த்தக சமூகத்தினருக்கு வினைத்திறனான சேவைகளைப் பெற்றுக்கொள்ளவும், நகரின் நாளாந்த சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், முறையான வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்படும் என்று கூறியதோடு, பதுளை தெற்கு ஒழுங்கையை அபிவிருத்தி செய்வதுடன், பதுளை நகருக்குள் பிரவேசிக்கும் பஸ்களை நிறுத்துவதற்கு, பொதுவான இடமொன்றை ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறினார்.

பதுளைப்பிட்டியவில், சகல வசதிகளுடனான இரண்டு மாடிக் கட்டடத்துடன் கூடிய உற்சவ மண்டபமொன்றும் நிர்மாணிக்கப்படும் என்றும், இதன்போது அவர் உறுதியளித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X