2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மலையக அதிகார சபை ஒரு சரித்திர சாதனை’

கு. புஷ்பராஜ்   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை, மலையக வரலாற்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சரித்திர சாதனை என்று, பிரிடோ நிறுவனம் புகழாரம் சூட்டியுள்ளது.

இது தொடர்பில் மேற்படி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரசபை தொடர்பாக, எதிர்பார்ப்புகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பெருந்தோட்டப் பகுதிகளில், இதுவரை முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள், சிறியளவான நிதி ஒதுக்கீட்டிலும் வெறும் நல்லெண்ண அடிப்படையில் மட்டுமே முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட பிரிடோ நிறுவனம், இது விடயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு, தாம் உட்பட பல பொது அமைப்புகள் வலியுறுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் முயற்சியால், பெருந்தோட்டப் பகுதிகளுக்கு, வீடமைப்பு உட்பட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் ஏகமனதாக அங்கிகரிக்கப்பட்டிருப்பது, மலையக வரலாற்றில் ஒரு திருப்புமுனை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களும், பெருந்தோட்ட மக்கள் இதுவரையில், முழுமையான தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படாதமை குறித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில், அவர்கள் அனைவரும், சட்டமூலம் ஏகமனதாக நிறைவேறுவதற்கும் பங்களிப்புச் செய்துள்ளனர் என, அந்நிறுவனம் பாராட்டியுள்ளது.

பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையானது, பெருந்தோட்ட அபிவிருத்திக்கான அடுத்தகட்ட நகர்வாகக் கருதப்பட்டாலும், மலையக மக்கள் முழுமையாக தேசிய நீரோட்டத்தில் இணைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்றும், அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .