2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

“மலையகக் கல்வி அபிவிருத்தித் தொடர்பில் ஆறுமுகன் எம்.பியிடம் வேண்டுகோள்”

Editorial   / 2018 ஜூன் 29 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

மலையகக் கல்வியின் பின்னடைவுக்கு அரசியலே காரணம் என்றுச் சாடியுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், எனவே, மலையகக் கல்வியின் அபிவிருத்தித் தொடர்பில், ஆறுமுகன் தொண்டமான் எம்.பி கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சப்ரகமுவ மாகாணக் கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், மின்னேரிபிட்டிய மண்டபத்தில், நேற்று (28) நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இங்குத் தொடர்ந்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மலையகக் கல்வியின் பின்னடைவுக்கு, அரசியலும் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்றுச் சுட்டிக்காட்டிய அவர், தான் கல்வி இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றதன் பின்பு, அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் தன்னிடம் வந்து தங்களுக்குத் தேவையானதைப் பெற்றுக்கொண்டு சென்றார்கள் என்றும் ஆனால், மத்திய, ஊவா மாகாணங்களில் அந்த நிலைமை இல்லை என்றும்  இதற்கு அரசியல் மட்டுமே காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

“தேர்தல் காலங்களில் அரசியலை தனியாகச் செய்து கொள்ளலாம். ஆனால் தேர்தலுக்குப் பின்பு நாம் அனைவரும் சமூக ரீதியாக சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். அவ்வாறுச் செய்தால் மட்டுமே, எமது மலையகக் கல்வியை, அபிவிருத்திச் செய்ய முடியும். அதற்கு சிறந்த உதாரணமாக வட, கிழக்கு மாகாணங்களை குறிப்பிட முடியும்.

“வடக்கு, கிழக்கில் இன்று எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அவை தங்களுடைய கொள்கைகளை தேர்தல் காலங்களில் முன்னெடுக்கின்றன. அதன் பின்பு, ஒரு சமூக சிந்தனையுடன் செயற்படுகின்றார்கள். அதேபோல, மலையகத்தில் உள்ள பிரதிநிதிகளும் ஏன் செயற்படக் கூடாது?

“மலையகத்தின் தந்தை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், மலையகக் கல்வி விடயத்தில், அரசியல் ரீதியாகச் செயற்பட்டதுக் கிடையாது. அதே கொள்கை,  தற்போது இருக்கின்ற ஆறுமுகன் தொண்டமான் எம்.பியிடமும் உள்ளது. மலையகக்  கல்வியை அபிவிருத்தியடையச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை  அவர் கொண்டிருந்தாலும் அவருடைய மாகாண அமைச்சர்கள் அந்த நிலைப்பாட்டில் இல்லையோ? என்ற கேள்வி எழுகின்றது.

“எனவே மத்திய கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுவதற்கு, அவர் தங்களுடைய மாகாண அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்க வேண்டும். இன்று மத்திய, ஊவா மாகாணங்களில், பாடசாலைக் கட்டடங்கள் திறக்கப்படாமலும் பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கப்படாமலும் உள்ளன. அதற்கு  இந்த இரண்டு மாகாணங்களும் எம்முடன் தொடர்புகொள்ளாமையே காரணமாகும்” என்றார்.  

மேற்படி மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் கல்வி அமைச்சர்கள், மாகாண பாடசாலைகளின் குறைபாடுகள் தொடர்பில் தமதுக் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை என்றுச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறானச் செயற்பாடுகளால் மாணவர்களே  பாதிக்கப்படுகின்றனர்கள் என்றும் தெரிவித்தார்.

“எனவே, மலையக சமூகத்தின் கல்வி அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு ஆறுமுகன் தொண்டமான் எம்.பிக்கு ஒர் அன்பான வேண்டுகோளை விடுக்கின்றேன். சமூக மேம்பாட்டுக்காக மத்திய, ஊவா மாகாண கல்வி அமைச்சை, கல்வி இராஜாங்க அமைச்சுடன் இணைந்சதுச் செயற்பட ஏற்பாடு செய்தால், எங்களுடைய கல்வி நிலையை, மிக விரைவாக முன்னேற்ற முடியும். அவ்வாறு இல்லையெனில், எதிர்கால எமது சமூகம், எம் இருவரையும் குறைகூறும் என்பதில் எந்தவிதமானச் சந்தேகமும் இல்லை” என  அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .