2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முன்னாள் அமைச்சரின் பதவி துறப்பு ‘நல்லாட்சியை மீண்டும் ஏற்படுத்தும்’

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி மற்றும் சொகுசு வீட்டுக் கொள்வனவு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பதவி துறப்பு, நாட்டில் மீண்டும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும்” என்று, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.   

இது தொடர்பில், அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,   

 “கடந்த 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் 17 ஆம் திகதி, நல்லாட்சிக்கான ஆணையை மக்கள் பெற்றுக்கொடுத்தனர். இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்பதும், அதனுடன் தொடர்புபட்டவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதும், மக்கள் ஆணையாக இருந்தது.   

“அது மட்டுமன்றி, மஹிந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற அதிகார துஷ்பிரயோகம், மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற  கருத்தும் வலுப்பெற்று இருந்தது.   இவைகள் மாற்றமடைந்து, நல்லாட்சி மலர்வதே, மக்களின் தேவையாக அமைந்திருந்தது. கடந்த இரண்டு வருட காலத்துக்குள், நல்லாட்சிக்கான பல அடிப்படை விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், நடைமுறை சிக்கல்கள் மற்றும் ஏனைய சில இழுத்தடிப்புகளால், மக்களின் பிரதான சில எதிர்பார்ப்புகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.   

“அதில் குறிப்பாக, மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்மோசடிகள் வெளிக்கொண்டுவரப்படாமை, அதனுடன் தொடர்புப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படாமை போன்றன முக்கியம் பெறுகின்றன.   

“ஆனால், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு வழிவகுத்துவிட்டுத்  தனது அமைச்சுப் பதவியை, இராஜினாமாச் செய்துள்ளார்.  

“இது, நல்லாட்சியின் கரங்களைப் பலப்படுத்தியிருக்கின்றது. அது மட்டுமன்றி, மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டுவரவும், துரித விசாரணை செய்து தண்டனைகளை பெற்றுக்கொடுப்பதற்குமான சூழலையும் முன்னாள் அமைச்சரின் பதவி விலகல் தோற்றுவித்திருக்கின்றது. மிக விரைவிலேயே, நல்லாட்சியின் பலமும் நலனும், அதற்கான ஆணை வழங்கிய மக்களுக்குக் கிடைப்பது உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .