2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மைத்திரியின் வாள் வீச்சுக்கு கையைத் தட்டினார் செந்தில்

Editorial   / 2018 ஜனவரி 19 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

“மதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் கடமையாற்றலா​ம் என்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு, ஜனாதிபதி தமது எதிர்ப்பைக் காட்டியதோடு, அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்தார். இது விவகாரத்தில், துணிச்சலுடன் உறுதியான முடிவை எடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் நன்றியும் பாராட்டுகளும்” என, ஊவா அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.  

இந்த விவகாரம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

“இலங்கை, ஐரோப்பிய நாடுகள் போன்றதல்ல. அந்நாடுகள் முற்போக்குக் கொள்கைகளைக் கொண்டதாகும். அந்நாடுகளில் கலாசாரம், பண்பாடு என்பவற்றில் நாகரிகம் அதிகரித்துக் காணப்படுகின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரையில், பெண்களுக்கென்று தனித்துவமான கௌரவமும் மதிப்பும் இருந்து வருகின்றது. அதற்கான கலாசாரமும், பண்பாடும், எமது நாட்டில் மேலோங்கி காணப்படுகின்றது.  

“ஆதிமுதலிருந்தே, தமிழர் பண்பாட்டிலும், கலாசாரத்திலும் பெண்களுக்கு அதிமுக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்களை ‘தாய்க் குலம்’ என்று போற்றிப் புகழ்ந்து வரும் ஆரோக்கியச் சூழலே எமது நாட்டில் இருந்து வருகின்றது. கல்வி, செல்வம், வீரம் என்ற வகையில் மூன்று விடயங்களுக்கும் சரஸ்வதி, இலட்சுமி, சக்தி என்று மூன்று பெண் தெய்வங்களை முன்னிலைப்படுத்தி வணங்கும் நிலையே தமிழர் பண்பாட்டு விழுமியங்களில் தொன்று தொட்டு வரும் நிகழ்வுகளாக இருந்து வருகின்றன.   

“இந்நிலையில் மதுபானங்கள் விற்பனை செய்யும் இடங்களில், பெண்களை ஈடுபடுத்துவது, கலாசார சீரழிவுக்கும் ஒரு காரணமாக அமைந்து விடும். அத்துடன் பெண்களின் உயரிய நிலைக்கும், களங்கம் ஏற்படவே செய்யும். பெரும்பாலும் மது அருந்தியவர்கள், தமது சுய நினைவை இழந்த நிலையிலேயே இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவர்களினால், பெண்களுக்கு பாதுகாப்புடன் கடமையாற்ற முடியாத சூழலே ஏற்படும்.

இவ்வகையில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றை எதிர்நோக்கவும் வேண்டும். இதனால், பெண்களுக்காக இருந்து வந்த உயரிய கௌரவத்துக்கும் மாசும், களங்கமும் ஏற்படவே செய்யும். மேலும், பெண்கள் மதுபான விற்பனை நிலையங்களில் கேலிக் கூத்துக்களுக்கும் உள்ளாக்கப்படுவர்.  

“சமூகத்தை உருவாக்கும் விடயத்திலும், அச்சமூகத்தை ஒழுக்கமுள்ள சமூகமாக கட்டியெழுப்புவதிலும், குடும்பங்களை வழிநடாத்தும் விடயத்திலும் தாய்க்குலத்திற்கு நிகர் தாய்க்குலத்தினரேயாவர். எமது நாட்டின் தேசிய கீதத்திலும் எமது நாட்டை ‘மாதா’ அல்லது ‘தாயே’ என்று தான் குறிப்பிடுகின்றோம். ‘தகப்பன் நாடு’ என்று நாம் கூறுவதில்லை. ‘தாய் நாடு’ என்றே கூறுகின்றோம். சமய ரீதியிலும் பெண் தெய்வங்களையே முன்னிலைப்படுத்தி வணங்குகின்றோம். குடும்பங்களிலும் தாயாருக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது.  
இவைகளுக்கு மேலும் மெருகூட்டும் வகையில், பெண்கள் மதுபான விற்பனை நிலையங்களில் கடமையாற்றுவதற்கு த​டையை ஏற்படுத்திய ஜனாதிபதிக்கு, இ.தொ.கா. தமது நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.  

இந்த வர்த்தமானியை வெளியிட்ட நிதியமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் இது போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சிந்தித்து செயற்படல் வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளினால், ஐக்கிய தேசியக் கட்சியின் மீது மக்கள் நம்பிக்கையிழந்து வருகின்றனர்” என்றும் குறிப்பிட்டார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .