2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’ரூ. 1,000, பல்கலைக்கழகம் குறித்த பேச்சுக்களில் இழுபறி’

Gavitha   / 2020 ஒக்டோபர் 30 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை மற்றும் மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை தோன்றியுள்ளதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் புதிய தலைவராக, லெட்சுமன் பாரதிதாசன் தனது கடமைகளை நேற்று (29) பொறுப்பேற்றுக்கொண்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மலையகத்தில் அமையவுள்ள பல்கலைக்கழகம் தொடர்பான இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ள நிலையில், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணி தொடர்பில் சில பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று கூறினார்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டத்தில், இந்தப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென்று தான் நம்புவதாகவும் இந்திய அரசாங்கமும், இந்தப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்கான உதவிகளைச் செய்யவுள்ளதென்றும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக​வே, இத்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள், இழுபறியில் உள்ளனவென்றும் கூறினார்.

மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவுக்கு விடுதலை கோரும் மகஜரில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ​கையெழுத்திடவில்லை என்றும் தெரிவித்த காங்கிரஸின் பொதுச் செயலாளர், அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலத்திலிருந்தே, தனி நபரொருவருக்காக, தமது கட்சி, எந்தவொரு முடிவும் எடுத்ததில்லை என்றும் நாடு சம்பந்தமான விடயங்களுக்குத்தான், தாங்கள் முன்னுரிமை கொடுத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் தொடர்பாக, எல்லோருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். நேற்றும் (28) அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டேன். அவரும், சிறந்த முடிவைப் பெற்றுத்தருவதாகக் கூறினார்.

“நாட்டில் இப்போதைய சூழ்நிலையில், எல்லோரையும் ஓரிடத்துக்கு அழைத்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாகவே, சம்பள பேச்சுவார்த்தையிலும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது” என்றும், இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X