2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வழமைக்குத் திரும்பியது ஹொலிரூட்

Editorial   / 2018 ஜனவரி 12 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

தலவாக்கலை ஹொலிரூட் தோட்ட மக்கள், கடந்த இரு தினங்களாக மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டமானது, தோட்ட முகாமையாளரின் உறுதி மொழியையடுத்து, முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.   
இரட்டைச் சிசுக்களைச் சுமந்திருந்த நிறைமாதக் கர்ப்பிணி, தனது தலைப்பிரசவத்துக்கான பிரசவ வலி​ ஏற்பட்ட போது, வைத்தியசாலைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்படாமையால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.   

இந்தச் சம்பவம், தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் தோட்டத்தில், கடந்த புதன்கிழமை (3) இடம்பெற்றுள்ளது.   

குறித்த கர்ப்பிணியின் மரணத்துக்கு, தோட்ட சுகாதார அதிகாரிகளின் அசமந்தப் போக்கே காரணமென்றும் எனவே, தோட்ட குடும்பநல உத்தியோகத்தர், வைத்தியர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தரை வெளியேற்ற வேண்டுமென்றும் கோரி, தோட்ட மக்கள், கடந்த இரண்டு தினங்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

இவ்விடயம் தொடர்பில், ஹொலிரூட் தோட்ட முகாமையாளர் டி.எம்.ஜி.பி தசநாயக்க தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.   

தோட்ட மக்களின் குற்றச்சாட்டை, தோட்ட நிருவாகம் ஆரம்பத்தில் ஏற்க மறுத்தது. எனினும் தோட்ட வைத்தியர் மற்றும் குடும்ப நல சேவகி (Mid wife) மீதான குற்றச்சாட்டுகளின் நியாயத் தன்மையை விளங்கிக்கொண்ட தோட்ட அதிகாரி, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கினார்.   

அதற்கமைய ஹொலிரூட் தோட்டத்தில் கடமையாற்றி வந்த வைத்திய அதிகாரி, குடும்ப நல சேவகி, வெளிக்கள உத்தியோகத்தர் ஆகிய மூவரையும் இடமாற்றம் செய்வதாக உறுதியளித்தார்.   

மேலும் தற்காலிகமாக கிரேட் வெஸ்டன் தோட்ட வைத்திய அதிகாரியின் சேவையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.   

அதேபோன்று, இந்த விசாரணையில் பங்கேற்ற லிந்துலை பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி, ஹொலிரூட் தோட்டம் உட்பட 3 தோட்டங்களுக்கு, குடும்ப நல சேவகிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.   

மாவட்ட சுகாதார பணிமனையில், எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுக் கூட்டத்தில், இவ்விடயம் தொடர்பாக பிரேரணை ஒன்றை முன்வைத்து நடவடிக்கை எடுப்பதாகவும் மேற்படி அதிகாரி தோட்ட மக்களுக்கு உறுதிமொழி வழங்கினார்.  

இவர்களின் உறுதி மொழியையடுத்து தோட்ட மக்கள், தமது பணிப்பகிஷ்கரிபை கைவிட்டனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .