2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வாக்குகளை வாங்கியோரே ‘கண்களில் குத்துகின்றனர்’

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

“பெருந்தோட்ட மக்கள் அனைவரும் மிகக் கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் பெருந்தோட்டங்கள் வீணாகிவிடும் என்று, முத்து சிவலிங்கம் எம்.பி அடிக்கடி கூறுவார். அவரது கூற்றை சிலர் கேலி செய்தனர். இன்று நிலைமை என்னவாகியுள்ளது? பெரும்பாலான தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதற்கெதிராக மக்களே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.   

“மலையக மக்கள் யாருக்கு வாக்களித்தார்களோ, அவர்களே, அந்த மக்களின் கண்களில் குத்துகின்றனர்” என்றும் அவர் கூறினார்.   

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான மக்கள் சந்திப்புகள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்றம் உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில், கிறெட்வெஸ்டன், ஹொலிரூட் மற்றும் ரட்ணகிரிய ஆகிய பகுதிகளில் நடைபெற்றன.   
இந்த மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,   

“1992ஆம் ஆண்டு, பெருந்தோட்டங்களை கம்பனி காரர்களிடம் கையளிக்கும்போது, முழுமையாகவே கையளித்தோம். ஆனால், இன்று தேயிலைத் தோட்டங்களில் உள்ள அரைவாசி நிலத்தில் காடுகளையே காணமுடிகிறது.   

“களைகளைக் கட்டுப்படுத்தும் கிருமிநாசினிகளை பயன்படுத்தாமையால், தேயிலை மலைகள் காடுகளாகி வருகின்றன. தேயிலை மலைகளுக்கு தொடர்ச்சியாக மூன்று வாரங்களுக்கு, கிருமி நாசினிகளை தெளிக்காமல் விட்டால், தேயிலை மலைகளில் புற்கள் வளரத் தொடங்கிவிடும். பின்னர் தேயிலை மலை பெருங்காடாகி அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் உருவாகிவிடும்.   

“இதனால், ஒரு குறிப்பிட்ட மாதங்களின் பின்னர் தொழிலாளர்கள் இந்தத் தேயிலை மலைகளில் தொழில் செய்வதை நிறுத்திவிடுவார்கள். இதனால் இந்தத் தேயிலை மலை காடாக்கப்பட்டு நிர்வாகத்தால் மூடப்படும்.   

“அதன் பின்னர், ஓரிரு வாரங்களில் அந்த தேயிலை மலை, பெரும்பான்மை கிராமங்களாக உருவாக்கப்பட்டு 100 குடும்பங்களைக் கொண்டு வந்து அரசாங்கம் குடியேற்றிவிடும். இது வெகுவிரைவில் நடக்கப்போகின்றது. அதன் பின்னர், அவர்கள் சிறுதோட்ட முதலாளிமார்களாக மாறிவிடுவார்கள். இதுதான் நடக்கப்போகின்றது. இன்னும் ஐந்து வருடங்களில் இவ்வாறான நிலைமை ஏற்படப் போகின்றது.   

“இதற்கு மக்களாகிய நீங்கள்தான், தகுந்த நடவடிக்கையெடுக்க வேண்டும். இல்லாவிடின் இருப்பதையும் இழந்துவிடுவீர்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடந்ததையும் நடக்கின்றதையும், நடக்கப்போவதையும் கூறும் வல்லமைபடைத்தது” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X