2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி விவகாரம்: இன்றும் பகிஷ்கரிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், எஸ்.கணேசன்

பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் பயிலும் ஆசிரியர் பயிலுநர்கள், இன்று (07) இரண்டாவது நாளாகவும் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.  

குறித்தக் கல்லூரியிலுள்ள சமையலறையின் பராமரிப்பாளரான பதிவாளரை, கல்லூரிலியிருந்து பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்​வைத்தே, இந்தப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.  

ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியின் சமையலறையில், முறையான சுத்தம் பேணப்பாடமை காரணமாக, சமையலறைக்கு கடந்த 5ஆம் திகதி மாலை சீல் வைக்கப்பட்டது. இதற்கு, பதிவாளரே காரணம் என்று தெரிவிக்கும் ஆசிரியர் பயிலுநர்கள், அவர்களுக்கு, நேர அட்டவணையின் படி உணவு வழங்கும் பொறுப்பு பதிவாளரிடமே உண்டு என்றும் அவரது கவனயீனம் காரணமாகவே, சமையலறையின் சுகாதாரம் பேணப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.  

இந்தச் சமையலறையின் சுகாதாரம் பேணப்படாமையால், கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 60 பயிலுநர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக, சுகவீனமுற்றியிருந்தனர் என்றும் சுகாதார குறைபாடுகளைச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பொதுசுகாதார பரிசோத அதிகாரிகளால் எச்சரிக்கை விடுத்திருந்த போதும், அதை, பதிவாளர் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.  

சமையலறைக்கு சீல் வைக்கப்பட்ட அன்றைய தினம் இரவு, பயிலுநர்களுக்கு உணவு வழங்குவதில், கல்லூரி நிர்வாகம், பதிவாளர்கள் அக்கறை எடுத்துக்கொள்ளவில்​லை என்று குற்றஞ்சாட்டிய பயிலுநர்கள், அன்றைய தினம் இரவு, பாணும் பருப்புக் கறியும் வழங்கப்பட்டபோதிலும், அடுத்தநாளாவது ஒழுங்கான முறையில் உணவு வழங்கப்படுமா என்று கேட்கச் சென்றபோதே, கல்லூரியின் சாரதியொருவரும் பதிவாளர் உட்பட நால்வர், மது அருந்திக்கொண்டிருந்ததாக, ஆசிரியர் பயிலுநர்கள் குற்றஞ்சாட்டினர்.  

இது தொடர்பாக, 119 ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டபோதும், வழமையான உடனடியாக வருகை தரும் பொலிஸார், அன்றைய தினம் ஒரு மணிநேரம் தாமதமாகவே வந்தனர் என்றும் மது அருந்தியுள்ளனரா என்பதை, பலூன் ஊதி பரிசோதனை செய்வதிலும், அசமந்தப் போக்குடன் பொலிஸார் செயற்பட்டதாகவும் பயிலுநர்கள் தெரிவித்தனர்.  

இந்நிலையில், நேற்று (06), அவர்கள் மரு அருந்தியிருக்கவில்லை என, கொட்டகலை பிரதேச வைத்தியசாலை அதிகாரியின் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. எனவேதான், பதிவாளரையும் இதனுடன் தொடர்புடையவர்களையும் பதவிநீக்கம் செய்யுமாறு கோரி, தாம் போராட்டத்தில் குதித்துள்ளதாக, பயிலுநர்கள் தெரிவித்தனர்.  

இந்நிலையில், தேசிய கல்வியற் கல்லூரியின் ஆணையாளர் கே.எச்.எம் பண்டார, தங்களைத் தொடர்பு கொண்டதாகவும் தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததாகவும் தெரிவித்தனர்.  

இதையடுத்து, வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட பயிலுநர்கள், வகுப்புகளுக்குச் சென்றதோடு, அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாவிடின், நாளையும் (08) போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்தனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .