2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’ஆயுதப்போர், சமஷ்டிக் கோரிக்கை, படுகொலைகள் அனைத்தும் தெற்கிலேயே ஆரம்பமாகின’

Yuganthini   / 2017 ஜூன் 15 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அரசாங்கத்தை எதிர்க்கும் ஆயுதப் போராட்டம், கடந்த 1971 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில், தென்னிலங்கையிலேயே இடம்பெற்றது. அத்துடன், அரசியல் தலைவர்களைக் கொலை செய்யும் அரசியல் படுகொலைக் கலாசாரமும், தென்னிலங்கையிலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆகவே, இன்றைய பெரும்பான்மையின அரசியல்வாதிகள் அனைவரும் எதிர்த்துவரும் அனைத்தும், தெற்கிலேயே ஆரம்பிக்கப்பட்டன. அதை மறந்துவிட்டு, இன்று எல்லாவற்றுக்கும் தமிழர்களையும் சர்வதேச சமூகத்தையும் சாடாதீர்கள் என, அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.

கொழும்பிலுள்ள பிரபல தொலைக்காட்சிச் சேவையொன்றில் இடம்பெற்ற நேரடி வாத, விவாத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன், மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“கண்டி, வடகிழக்கு மாகாணம் மற்றும் ஏனைய பகுதிகள் என்ற மூன்று அலகுகளை கொண்ட சமஷ்டிக் கோரிக்கைக்கான யோசனை, தெற்கிலிருந்தே வடக்குக்குச் சென்றது. அது, தனி நாட்டுக் கோரிக்கையல்ல. ஒரே நாட்டுக்குள் மூன்று அலகுகளைக்கொண்ட சமஷ்டிக் கோரிக்கையாகும். அதைக்கூட தமிழ்த் தலைவர்கள் அன்று ஏற்கவில்லை. அப்படியானவர்கள், பின்னாளில் ஏன் தலைகீழாக மாறினார்கள் என்று யோசியுங்கள். அதற்கு வழிசமைத்த காரணங்கள் என்ன என்பதைக் கண்டறிந்து, அவற்றுக்கானத் தீர்வை வழங்காமல், ஒருபோதும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது.

அதேபோல்தான், அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை, ஜே.வி.பியினரே தெற்கில் ஆரம்பித்தனர். அரசியல் தலைவர்களைப் படுகொலை செய்யும் கலாசாரமும், பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கவை, புத்தபிக்கு ஒருவர் படுகொலை செய்ததும் தெற்கிலேயே ஆகும்.  இவை தான், இந்நாட்டுச் சரித்திரம். இவற்றை தொடர்ந்தே, இனப்பிரச்சினை தீவிரமாக ஆரம்பமாகியது.

ஆனால், இலங்கையில் இனப்பிரச்சினையை, தந்தை செல்வாவின் சமஷ்டிக் கோரிக்கையே ஆரம்பிக்கவைத்தது எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அதுமட்டுமல்ல, மேற்குலக சமூகமே இலங்கையில் பிரிவினையை உருவாக்கியது, இனப்பிரச்சினையை தோற்றுவித்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தங்களுக்கு வேண்டிய இடத்தில் இருந்து சரித்திரத்தை ஆரம்பிக்க முயற்சிசெய்ய வேண்டாம் என, கேட்டுக்கொள்கிறேன்” என, அமைச்சர் மேலும் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X