2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘அச்சமடைந்துள்ளோம் என்பதை ஒப்புக்கொள்கின்றோம்’

Editorial   / 2018 பெப்ரவரி 20 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

“உள்ளுராட்சி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த வெற்றியையிட்டு நாங்கள் அச்சமடைந்துள்ளோம்;” என தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நேற்று (19) மாட்டீன் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்திருந்தனர். இதனூடாக ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கூட்டு அரசாங்கம் ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டது. இதில் இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். போரால் அழிந்துபோன எமது தேசத்தையும், மக்களையும் மீளக் கட்டியெழுப்ப வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால், கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாகவும், பெரும்பாலான விடயங்களில் அரசாங்கம் மெத்தனமாக செயற்பட்டு வருவதுடன், எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாததையிட்டு நாங்கள் மிகக் கவலையடைந்தவர்களாக இருக்கின்றோம்.

இவ்வாறான நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டிருந்தது. ஆயினும், இந்த அரசாங்கம் நாம் எதிர்பார்த்தவாறு அத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் எங்களைப் போன்றே சர்வதேச இராஐதந்திரிகளும் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

எந்தவொரு துறையிலும் நாங்கள் முன்னேற்றங்களை காணவில்லை. அதற்காக ஒன்றும் நடைபெறவில்லை என்றும் சொல்லவில்லை. ஆனால் எங்களுடைய எதிர்பார்ப்புக்களை இரண்டரை ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை என்றே குற்றஞ்சாட்டுகிறோம்.

குறிப்பாக நிலம், காணாமலாக்கப்பட்டோர், அரசியல் கைதிகள்; விடுவிக்கப்படவில்லை. அத்தோடு இனப்பிரச்சனை விடயத்திலும் இடைக்கால அறிக்கை வந்தபோதும், அதன் பின்னரும் அதற்கான முன்னேற்றங்கள் இல்லாத நிலை காணப்படுகிறது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னராக தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளால் எங்கள் எதிர்பார்ப்புக்கள் கேள்விக்குறியாகி வருகின்றன.

குறிப்பாக ஒரு அரசியல் தீர்வுத் திட்டம் வருமானால், நாடாளுமன்றத்தில்  மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறலாம் என்ற யுத்தியைத் தான் நாங்கள் இதுவரை காலமும் பயன்படுத்தி வந்தோம். அத்தகைய நம்பிக்கையின் அடிப்படையிலேயே அரசில் பங்காளிகளாக இல்லாவிட்டாலும் அரசை ஆதரித்து செயற்பட்டு வந்தோம்.

இத்தேர்தலில், இடைக்கால அறிக்கையில் உள்ள விடயங்கள் சமஷ்டி என்றும், இதனால் நாடு பிளவுபடப் போகின்றது என்ற பிரசாரத்தை மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் தீவிரப்படுத்தியிருந்தார்கள். இது தான் அவர்களுடைய வெற்றிக்கு ஒரு காரணமாகவும் உள்ளது.

இவ்வாறான அவரது வெற்றி, இனப்பிரச்சனைத் தீர்வுக்கு எங்களுக்கு எவ்வளவு தூரம் உதவப் போகின்றதென்ற கேள்வியும் எழுகின்றது. இதனால் நாங்கள் அச்சமடைந்துள்ளோம் என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

அதேபோன்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் பிளவுபட்டுள்ளதால், நாங்கள் இதுவரை காலமும் எடுத்த முன்னேற்ற நடவடிக்கைகள் தொடருமா என்ற கேள்வியும் எழுகிறது.

அதே நேரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட, இனப்பிரச்சனை தீர்வு மற்றும் வடக்கு கிழக்கு பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதுக்கான தீர்மானம் நடைமுறைத்தப்படுவதிலும் பல குழப்பங்கள் ஏற்படுமென்று நினைக்கிறோம். இத்தகைய நிலைமை இந்த ஆட்சியைக் கொண்டுவர உதவிய தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அவ்வாறு தென்னிலங்கையில் இப்படியொரு ஏமாற்று நடவடிக்கை இடம்பெறுமாக இருந்தால், அல்லது மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராகச் செயற்படுவார்களாக இருந்தால் சர்வதேச சமூகத்துடன் கலந்து ஆராய்ந்து எதிர்காலத்தில் எவ்வாறான தீர்மானங்களை எடுப்ப வேண்டும் என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.

ஏனெனில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியுமா, ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  இந்த நிலைமை தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான எதிர்பார்ப்புக்கு பாதகமாகவும் பங்கமாகவும் உள்ளது” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .