2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அரசியல்வாதிகளால் இயலாவிட்டால் நாங்கள் வெளியேற்றுவோம்’

எம். றொசாந்த்   / 2018 ஜூன் 07 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற தமிழ் அரசியல்வாதிகளால் இயலாவிட்டால் அதனை அவர்கள் பகிரங்கமாக கூறவேண்டும். அதன் பின்னர் தென்பகுதி மீனவர்களை நாங்கள் வெளியேற்றுவோம்” என வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி நேற்று (06) வடமராட்சி  கிழக்கு மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலிலேயே வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“வடமராட்சி கிழக்கிலிருந்து தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற அரசியல்வாதிகளால் இயலாவிட்டால் அதனை அவர்கள் பகிரங்கமாக கூறவேண்டும். அவர்களால் முடியாவிட்டால் தென்பகுதி மீனவர்களை எப்படி வெளியேற்றுவதென்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் அவர்களை வெளியேற்றுவோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தென்பகுதி மீனவர்களை வெளியேற்றுவது தொடர்பாக மத்திய கடற்றொழில் அமைச்சருடன் பேசி தீர்வு காணுவோம் என்றார்கள். அதற்கு என்ன நடந்தது? அட்டை பிடித்தல், சுருக்குவலை பயன்படுத்துதல், றோலர் படகுகளைப் பயன்படுத்தி கடற்றொழில் செய்தல் போன்ற சட்டத்துக்கு முரணான கடற்றொழில் முறைகளை தடைசெய்யக்கோரி தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் கொண்டுவந்து அதனை நிறைவேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பின்னர் றோலர் படகு தொழிலை உடனடியாக தடைசெய்யவேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுடன் இணைந்து கூறுகின்றார்.

சட்டவிரோத தொழில்களை தடைசெய்ய விடாது தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களிடம் எங்களுடைய கடல்வளத்தை பாதுகாக்கும்படி எப்படி கேட்கலாம்?  தென்பகுதி மீனவர்களுக்கு கால அவகாசத்தை வழங்காமல் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

இல்லை அதனை செய்ய தங்களால் இயலாது என்றால் அதனை அவர்கள் வெளிப்படையாக கூறவேண்டும் என கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை அடாத்தாக தங்கியுள்ள மீனவர்கள் உடனடியாக வெளியேறாது விட்டால், நாளை (08) யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக” வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .