2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’இன நல்லுறவுக்கு தீங்கிழைக்க வேண்டாம்’

Editorial   / 2018 ஜூலை 24 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண நகரில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள், இன நல்லுறவுக்குப் பங்கம் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து வாழ வேண்டுமென, கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

யாழ்ப்பாண முஸ்லிம்களை, கடந்த ஞாயிற்றுக்கிழமை (22), ஒஸ்மானியாக் கல்லூரியில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, அமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்போது, வடக்கிலே யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள், காணிப் பிரச்சினையை அதிகளவில் எதிர்கொண்டு வருவதாகவும் இதைத் தீர்ப்பதற்கு, தாம் பல்வேறு சவால்களையும் தடைகளையும் சந்திக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், தமக்குக் கிடைத்த புள்ளிவிவரங்களின் படி, சுமார் 355 முஸ்லிம் குடும்பங்களுக்கு, காணி மற்றும் வீடுகள் இல்லாத நிலையுள்ளதென்றும் இருப்பினும், பல்வேறு தடைகளைத் தாண்டி, இப்பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க முயற்சிசெய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காணிப் பிரச்சினை தீராதவரை, வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதில் சிக்கலென்றும் இந்தப் பிரச்சினை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோருடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் சில இடங்களை அடையாளப்படுத்தி, உரிய அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும், அமைச்சர் ரிஷாட் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனது அமைச்சின் கீழ் சுயதொழில் வாய்ப்புகளை மேற்கொள்வதற்காக நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களில், இந்தப் பிரதேச மக்களையும் உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர், எவ்வித அரசியல் உள்நோக்கமுமின்றி, மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டு. சமூகநலன் கருதியே தாம் இப்பிரதேசங்களுக்கான அபிவிருத்திகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பல்லினச் சமூகம் வாழும் இந்த மாவட்டத்தில், பண்புடனும் அந்நியோன்ய உறவுடனும் வாழப் பழகிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள அமைச்சர்,  ஒருவர் செய்யும் தவறு, முழுச் சமூகத்தையும் பாதிப்படையச் செய்வது மாத்திரமன்றி, நம்மைப் பற்றிய பிழையான எண்ணங்களை, மாற்றுச் சமூகத்தினரிடம் ஏற்படுத்தும் என்பதை நினைவிற்கொண்டு செயற்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .