2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘இரகசிய வாக்கெடுப்பை நடாத்தக் கோருவது அர்த்தமற்றது’

Editorial   / 2018 பெப்ரவரி 20 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

“இரகசிய வாக்கெடுப்பை நடாத்தக் கோருவது அர்த்தமற்றது” என தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

“யாழ் மாநகர சபை உள்ளிட்ட சபைகளில் இரகசிய வாக்கெடுப்பை நடாத்த கூட்டமைப்பு சம்மதிக்க வேண்டுமென்றும், கட்சி உறுப்பினர்களை மிரட்டுவதை நிறுத்தவேண்டுமெனவும்” தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

நேற்று (19) மார்ட்டீன் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கNஐந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து தொடர்பாக கேட்டபோதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளுராட்சி மன்றங்களின், வடக்கு கிழக்கில் 56 சபைகளில் 40 சபைகளில் நாங்கள் பெரும்பான்மையைப் பெற்றுள்ளோம். ஆனால் வடகிழக்கு முழுவதும் கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சி 2 இடங்களில் தான் பெரும்பான்மையைக் கொண்டுள்ளன.  ஆகவே உள்ளுராட்சி மன்றங்களில் பெரும்பான்மையை பெற்றுக் கொண்ட கட்சிகள் ஆட்சியமைப்பார்கள் என்ற அடிப்படையில் நாங்கள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.

இதற்கு ஏனையவர்கள் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டுமெனவும் நிர்வாகத்தைக் குழப்பக் கூடாது எனவும், நாங்கள் பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

பெரும்பான்மை பெற்ற 40 சபைகளிலும் கூட்டமைப்பு ஆட்சிமைக்கும். அதனைக் குழப்புவது தமிழ் தேசத்தின் எதிர்காலத்தையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும்.

இவ்வாறு நாங்கள் ஒத்துழைத்துச் செயற்பட அழைப்பு விடுத்திருக்கின்ற போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உண்மைக்குப் புறம்பான கதைகளைக் கூறி எல்லாவற்றையும் குழப்புகின்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். ஆகவே கட்டுக்கதைகள் கட்டுவதை விடுத்து குழப்பமால் இருக்குமாறு நாங்கள் அவரிடம் கேட்டுக் கொள்கிறோம்.

அவர் கூறுவது போன்று, இரகசிய வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமென்று கூறுவதை நிராகரிக்கின்றோம். சட்ட விதிகளின்படி அதற்கான விதிமுறைகள் இருந்தாலும், அதைப் பற்றி நாங்கள் யோசிக்கவில்லை. எங்கள் பிரதிநிதிகள் ஒற்றுமையாக இருப்பதென்பது எமது கட்சிக்கு முக்கியம். ஆகவே அவர் அதனைக் குழப்புவதுக்கு இடமளிக்க முடியாது. இவ்வாறானதொரு இரகசிய வாக்கெடுப்பை நடாத்தக் கோருவது அர்த்தமற்ற கேள்வி” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X