2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கல்வி அமைச்சருக்கு சந்தர்ப்பம் வழங்க மறுத்த அவைத்தலைவர்

எம். றொசாந்த்   / 2018 மார்ச் 13 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி அமைச்சின் மீதான குற்றசாட்டுகளுக்கு பதிலளிக்க கல்வி அமைச்சர் முற்பட்ட போது, முதலில் மறுப்பு தெரிவித்த அவைத்தலைவர், பின்னர் பதிலளிக்க அனுமதி அளித்தார்.

வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்று (13) இடம்பெற்றது.

இன்றைய அமர்வின் போது, வடமாகாண கல்வி அமைச்சு வினைத்திறனாக செயற்படவில்லை, ஆசிரியர் பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை, கல்வி திணைக்களங்கள், வலயங்களில் அதிகாரிகள் அசமந்தமாக செயற்படுகின்றார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காரசாரமாக சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் முன் வைத்து கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து, ‘குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க அனுமதிக்க வேண்டும்’ என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் கோரினார்.

எனினும், ‘குற்றச்சாட்டுக்களுக்கு அடுத்த அமர்வில் பதில் அளியுங்கள்’ என அவைத்தலைவர் தெரிவித்தார்.

அதற்கு சம்மதிக்காத கல்வி அமைச்சர் ‘இன்று கதைத்த விடயத்துக்கு, அடுத்த அமர்வு வரை பொறுத்திருந்து பதிலளிக்க முடியாது. இன்றே பதிலளிக்க வேண்டும்’ என கூறினார்.

அதனை அடுத்து இருவருக்கும் இடையில் சுமார் 5 நிமிடங்கள் கருத்து மோதல் ஏற்பட்டு, இறுதியில், ‘சுருக்கமாக உங்கள் பதிலை கூறுங்கள்’ என அவைத்தலைவர் கல்வி அமைச்சர் பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்கினர்.

அதனை அடுத்து கல்வி அமைச்சர், தமது அமைச்சின் மீதான குற்ற சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் மிக விரைவில் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு விடும் எனவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, எதிர்வரும் 27ஆம் திகதிக்கு சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .