2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘காலம் கடத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது’

Editorial   / 2018 ஜனவரி 22 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கடந்த 04 வருடங்களாக ஒவ்வொரு அலுவலகம் ஒவ்வொரு இடத்தில் என பல்வேறு இடங்களில் இயங்கிவந்த காரணத்தினால் பல பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு எட்டமுடியாது கடிதப் போக்குவரத்தில் வீணே காலத்தைக் கடத்தி வந்தோம். அந்த நிலைகளுக்கு, இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 

பிரதம செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), திறைசேரி அலுவலகங்களின் புதிய காரியாலய திறப்பு விழா நிகழ்வுகள் கைதடியில் இன்று (22) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடரந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“இன்றைய தினம் வடமாகாணசபையின் வரலாற்றில் ஒரு முக்கியதினமாகக் கொள்ளப்படலாம். முதலமைச்சரின் அமைச்சுடன் இணைந்த அனைத்து அலகுகளும் ஒரே கூரையின் கீழ் தத்தமது அலுவலகங்களைக் கொண்டிருப்பதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள், விடயங்கள் ஆகியவற்றை உடனடியாகவே கலந்துபேசி தீர்வு காணக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இன்று கனிந்துள்ளது.

“2013ஆம் ஆண்டில், வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி அதிகாரங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதும் எமது அரச உத்தியோகத்தர்கள் தமது பழக்கத்தின் நிமித்தம் ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழேயே இயங்க எத்தனித்தனர். இது வடமாகாணசபையின் முதலமைச்சர் என்ற வகையில் எனக்கும் மற்றும் அவைத்தலைவர், ஏனைய அமைச்சர்கள், அங்கத்தவர்கள் என அனைவருக்கும் எமது நிர்வாக சக்கரத்தை நகர்த்திச் செல்வதற்கு பெரும் சவாலாக அமைந்திருந்தது.

“எனினும் தற்போது நிலைமைகள் எமது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அனைத்து செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் சுதந்திரத்துடன் தமது பூரண ஆதரவை வழங்குவதன் மூலம் எமது அலுவலகக் கடமைகளை இலகுவாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் முன்னெடுத்துச் செல்லக் கூடியதாக உள்ளது.

“வடமாணத்தில் வாழும் பொது மக்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.  இவர்களின் வாழ்வாதார நிலைமைகளை சற்று மேல் உயர்த்தி விடுவதற்கும் பாதிப்புற்றவர்களைச் சமுதாய நீரோட்டத்தில் இணைந்து கொள்ளச் செய்வதற்குமாக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதனை வலுவாக்க உங்கள் ஒவ்வொருவரினதும் பங்காற்றல் தேவைப்படுகிறது.

“திட்டமிட்டு தமிழ் மக்களின் இருப்புகளை, நிலங்களை, தொழில்களைச் சூறையாட தென்னவர்கள் கங்கணம் கட்டி நிற்பதாக எமக்குப் புலப்படுகிறது. அவர்கள் தமக்கு உதவுவதற்காகப் பல திணைக்களங்களை எம் மத்தியில் உலவவிட்டு தமது காரியங்களை நிறைவேற்றி வருகின்றார்கள்.

“இந்த நிலைமைகளில் இருந்து நாம் எமது மக்களை பாதுகாக்க வேண்டுமாயின், இவ்வகையான தவறான நடவடிக்கைகளை துணிந்து எதிர்ப்பதற்கும் எடுத்துக் கூறுவதற்கும் நீங்கள் யாவரும் முன்வரவேண்டும். நீங்கள் அவற்றைப் பகிரங்கமாகக் கூறுவது உங்களின் கடமைகளை அல்லது எதிர்காலத்தைப் பாதிக்கும் எனக் கருதுவீர்களாயின் அவ் விடயங்களை எம்மிடம் எடுத்துக் கூறுங்கள். நாம் அவற்றை மத்திய அரசாங்கத்துக்கும் உலக நாடுகளுக்கும் மற்றும் உதவி புரியக் கூடிய நாடுகளுக்கும் எடுத்துக்கூறி விமோசனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிக்கத் தயாராகவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .