2024 மார்ச் 28, வியாழக்கிழமை

குடும்பத்தலைவருக்கு வாள்வெட்டு : குற்றவாளிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 21 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவரை, வெட்டிப் படுகாயம் ஏற்படுத்திய 4 குற்றவாளிகளுக்கு, 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று (20)  தீர்ப்பளித்தார்.

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதி ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்குப் பகுதியைச் சேர்ந்த, அன்ரன் எட்வெட் ஹென்றி என்பவரை குழுவொன்று வெட்டிக் காயப்படுத்தியது. இச்சம்பவத்தில், அவரது ஒரு கை துண்டாகியது.

இச்சம்பவம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்றுறை பொலிஸார், டெலஸ் டிலக்ஸன், சிவராசா கமிஸ்ரன், சச்சிதானந்தம் லக்ஸ்மன், சச்சிதானந்தம் சஜீவன் ஆகிய 4 இளைஞர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்திருந்தனர்.

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் சுருக்க முறையற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, 4 சந்தேநபர்களுக்கும் எதிரான வழக்கு ஆவணங்கள், சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டன. சந்தேகநபர்களும்  பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் 4 பேருக்கும் எதிராக கொலைமுயற்சி குற்றச்சாட்டை முன்வைத்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எதிரிகள் நால்வரும் சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையாகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

இதன்போது, “எதிரிகள் நான்கு பேரும் குற்றத்தை ஏற்றுக்கொள்கின்றனர். அது தொடர்பில் அவர்கள் இப்போது வருந்துகின்றனர். எனவே அவர்களுக்கு குறைந்த பட்ச தண்டையை வழங்க வேண்டும்" என்று எதிரிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

“எதிரிகள் குற்றத்தை தாமாக முன்வந்து ஒத்துக்கொண்டுள்ளனர். எனினும், இது கொலை முயற்சிக் குற்றமாகும். அதற்கு அதிக பட்ச தண்டனை விதிப்பதுடன், அவர்களால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்" அரச சட்டத்தரணி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

“எதிரிகள் 4 பேரும், தம் மீதான கொலை முயற்சிக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் 4 பேரையும் மன்று குற்றவாளிகளாக இனங்கண்டு 10 ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவருக்கு இரண்டாவது எதிரி 6 இலட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். அதனை வழங்கத் தவறின் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். 1ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது எதிரிகள் பாதிக்கப்பட்டவருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிதியை வழங்க வேண்டும். அதனை வழங்காவிடின் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

4 எதிரிகளும் தண்டப்பணமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். தவறின் ஒரு மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்" என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

இழப்பீட்டு மற்றும் தண்டப்பணம் செலுத்த குற்றவாளிகள் நால்வருக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதிவரை அவகாசம் வழங்கி மன்று உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X