2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’குப்பைகளை அகற்ற விசேட செயற்றிட்டம் வருகிறது’

Editorial   / 2017 நவம்பர் 20 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

“யாழ்ப்பாணத்தில், குப்பைக்கூழங்களை நாமே அகற்றி, புனிதமான நகரை உருவாக்குவோம் என்ற விசேட செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளோம்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

குருநகர் ஐந்தாம் மாடிக் குடியிருப்புப் பகுதியில், இன்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்ட விசேட திண்மக் கழிவு அகற்றல் வேலைத்திட்ட நிகழ்வின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, 

“தற்போது மழைக்காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்குப் பகுதியில் டெங்கு மற்றும் மலேரியா நோய்கள் விரைவாகப் பரவி வருவது பற்றி சுகாதார அமைச்சும் யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்களும், பொதுச் சுகாதார பரிசோதகர்களும் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.  யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில், பெருமளவில் குவிந்து கிடக்கும் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கென விசேட திண்மக் கழிவு அகற்றல் செயற்றிட்டம் ஒன்றை இன்று (திங்கட்கிழமை) முதல் 24ஆம் திகதி வரை, யாழ். மாநகரசபை, மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்கள் அனைத்தையும் இணைந்து நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளன. இவ்வாறு நடைமுறைப்படுத்துவதன் மூலம், பொதுமக்களிடையே விழிப்புணர்வைக் கொண்டுவர முடியும். பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய டெங்கு, மலேரியா போன்ற விரைவாகப் பரவிவரும் நோய்களிலிருந்து, எமது குழந்தைகளைப் பாதுகாத்து அவர்களை ஆரோக்கியமான குழந்தைகளாக வளர்த்தெடுப்பதற்கு வழிவகுக்கும் திட்டம் இதுவாகும்.

“யாழ். மாநகரசபையானது, நாளொன்றுக்கு சுமார் 70 மெற்றிக் தொன் வரையான திண்மக்கழிவுகளை அகற்றுகின்ற போதும், குப்பைகளின் தேக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இக்குப்பைகள் விரைந்து அகற்றாவிடின், சில காலத்தின் பின்னர், யாழ்.
நக​ரமே ஒரு குப்பை மேடாகக் காட்சியளிக்கும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .