2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த கூட்டமைப்பினர்

Editorial   / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பால், யாழ்ப்பாணத்தில், நேற்று (22) நடத்தப்பட்ட ஊடகச் சந்திப்பில், ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்டக் கேள்விகளுக்க்கு உரிய முறையான பதில்களை வழங்குவதற்கு, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் ஆகியோர் மறுத்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முதலாவதாக, கூட்டமைப்பை கட்சியைப் பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து மன்னாரில் மேற்கொள்ளப்படுகின்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு உரிய பதில்களை வழங்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

அதாவது, இந்த ஊடகச் சந்திப்பை வேறு நோக்கத்துக்காக நடத்துகிறோமென, சம்மந்தன் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, “இந்தக் கேள்வியை விடுத்து வேறு கேள்வியைக் கேளுங்கள். அதைப் பற்றிப் பேசுவாம்” என, சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

ஆனாலும் இதன்போது கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா எம்.பி, “கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லை. பங்காளிக் கட்சிகளோடு சேர்ந்து, அவர்களுடன் பேசித் தான் இந்த இயக்கத்தை நடத்துகின்றோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை தேர்தலொன்று நெருங்கி வருகின்ற நேரத்தில், தமிழ்க் கட்சிகளிடையே ஏற்படும் பிளவுகள் மற்றும் புதிய கூட்டணிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கும், அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

அதாவது, “தேர்தல் சம்பந்தமான கேள்விகள் வேண்டாம். தேர்தல் இன்னும் அறிவிக்கவில்லை. அதனை அந்த நேரத்தில் பார்த்துக் கொள்ளுவோம்” என சுமந்திரன் எம்.பி கூறி, ஊடகச் சந்திப்பை நிறைவுக்குக் கொண்டு வந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .