2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சதீஸை நீக்கும் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்,சொர்ணகுமார் சொரூபன்

வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸை, இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம், இன்று (18) இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்து உத்தரவிட்டது.

தமிழீழ விடுதலைக் இயக்கத்தைச் (டெலோ) சேர்ந்த கந்தசாமி சதீஸ், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இதையடுத்து, டெலோவின் பரிந்துரையின் பேரில், கட்சியின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகிச் செயற்பட்டார் என்றக் குற்றச்சாட்டில் உறுப்பினர் க.சதீஸை, தமிழரசுக் கட்சி, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியது.
அத்துடன், அவரை நகர சபை உறுப்புறுமையிலிருந்து நீக்குமாறு, யாழ்ப்பாணம் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளருக்கு, தமிழரசுக் கட்சியால் கடிதமும் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், கட்சியின் தலைமை எடுத்துள்ள தீர்மானத்துக்கு ஆட்சேபனைத் தெரிவித்தும் அதனை வெற்றும் வறிதானதுமாக்கும் கட்டளையை வழங்குமாறு கோரியும், உறுப்பினர் சதீஸ் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில், நீதிப் பிரேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கி.துரைராசசிங்கம் மற்றும் பொருளாளர் பொ.கனகசபாபதி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை, யாழ்ப்பாணம் மாவட்ட நீதவான் வி.இராமகமலன் முன்னிலையில் இன்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறு கட்டளையிட்ட நீதவான், பிரதிவாதிகளின் அறிவித்தலுக்கு 14 நாள்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்து உத்தரவிட்டார்.

அத்துடன், வழக்கு விசாரணை, எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம், பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி தமது பதிலைச் சமர்ப்பிக்க ​வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் வலிகாமம் தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் ஜி.பிரகாஷை, கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கும் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைக்கு, எதிர்வரும் 25ஆம் திகதி வரை, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X