2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘சிறுபான்மை கட்சிகள் துணை போகக் கூடாது’

Editorial   / 2017 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமேயன்றி குறைக்கப்படக் கூடாது. மேலும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு சிறுபான்மைக் கட்சிகள் துணை போகவும் கூடாது” என, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  

இது குறித்து, அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

“இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் எமக்குக் கிடைத்துள்ள மாகாண சபை முறைமையானது, வடக்கைப் பொறுத்தவரையில் முயலாமை, இயலாமை போன்ற காரணங்களாலும், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல், மோசடிகள் காரணமாகவும் மக்கள் பணிக்குரிய செயற்றிறன் இன்மையாக்கப்பட்டுள்ளது.   

“வட மாகாண சபையில் அங்கம் வகிக்கின்ற பலருக்கு மாகாண சபை உறுப்புரிமை வானத்தில் இருந்து வந்தததைப் போன்று கிடைத்திருப்பதால், அதனது பெறுமதியை அவர்கள் உணர இயலாதவர்களாக உள்ளதாலேயே அதன் மூலமான எமது மக்களுக்கான பணிகள் முடக்கப்பட்டுள்ளன.   

“எமது பாரிய அர்ப்பணிப்புகள், உயிர்த் தியாகங்கள், இழப்புகள் ஊடான தொடர் மக்கள் போராட்டங்களின் மூலமாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட மாகாண சபை முறைமையானது இன்று, அந்தப் போராட்டங்களையே கொச்சைப்படுத்துகின்ற அளவுக்கு வடக்கில் கேலிக்கூத்தாக ஆக்கப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.  

“வடக்கு மாகாண சபையின் செயற்றிறன் இன்மையை அவதானத்தில் கொண்டு, மாகாண சபை முறைமை குறித்து எவரும் குறை மதிப்பீடு செய்யக் கூடாது. தற்போது இருக்கின்ற அதிகாரங்களை வைத்து செயற்படுத்தினால்கூட எமது மக்களுக்கு மாகாண சபையூடாக பல்வேறு பணிகளை ஆற்ற முடியும்.   

“எனினும், தற்போது மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.   

“இந்நிலையில், மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைக் குறைப்பதற்கு, பறிப்பதற்கு முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து செயற்பாடுகளையும் நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், அதற்கு ஒருபோதும் சிறுபான்மைக் கட்சிகள் துணை போகக் கூடாது எனவும் கேட்டுக் கொள்கின்றோம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .