2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை: ஏப்ரல் 22இல் தீர்ப்பு

Editorial   / 2019 மார்ச் 15 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்றொசாந்த்

சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினர் ஐவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் ஏப்ரல் 22ஆம் வழங்கப்படவுள்ளது.

சுருக்கமுறையற்ற விசாரணையில் அரச தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்த்தாக வழக்குத் தொடுனர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி மன்றில் சமர்ப்பணம் செய்ததையடுத்தே, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல், கட்டளைக்கான திகதியை நிர்ணயித்தார்.

யாழ்ப்பாணம் - சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரின் வழக்கு நேற்று யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் சுருக்கமுறையற்ற விசாரணைக்காக வந்தது.

இதன்போது மன்றில் சந்தேகநபர்களான 5 இராணுவத்தினரும் முன்னிலையாகினர். வழக்குத் தொடுனர் தரப்பில் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி  முன்னிலையானார். இராணுவத்தினர் சார்பில் சட்டத்தரணிகள் இருவர் முன்னிலையாகினர்.

மன்றில் கடந்த தவணைகளில் சாட்சிகள் 1,2,3,4,5.,6 என ஒழுங்கமைக்கப்பட்டு சாட்சியங்கள் பெறப்பட்டன. பொலிஸ் சாட்சியம் முற்படுத்தப்பட்டு மன்றுக்கு சமர்பிக்கப்பட்டது. அத்துடன், வழக்குத் தொடுனர் சாட்சியங்கள் நிறைவடைந்ததாக அரச சட்டவாதி மன்றுரைத்தார்.

எதிரிகளிடம் கூண்டுச் சாட்சியம் மன்றினால் கோரப்பட்டது. ஐவரில் ஒருவர், "இந்த வழக்குடன் எனக்குத் தொடர்பில்லை. இந்த மன்றில் இதுவரை காலம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று மன்றுரைத்தார். ஏனைய நால்வரும் ஆட்சேபனையை முன்வைக்கவில்லை.

அதனால் இந்த வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணை முடிவடைந்ததால் அதன் மீதான கட்டளையை, ஏப்ரல் 22ஆம் திகதி வழங்குவதாக மன்று அறிவித்து, வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X