2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சூட்சுமமாக அலைபேசியை பறித்தவருக்கு விளக்கமறியல்

எம். றொசாந்த்   / 2018 ஜூன் 01 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் இளைஞர் ஒருவரை ஏமாற்றி அலைபேசியை அபகரித்துச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமக்கமலன் இன்று (01) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் நகரிலுள்ள புடவைக் கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், தனது முதலாளியை அழைத்துக் கொண்டு புதன்கிழமை (30) இரவு அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

முதலாளியின் வீட்டுக்கு அருகில் முதலாளியை இறக்கிவிட்டு நின்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர், தமக்கு அவரச அழைப்பு ஒன்றை எடுக்க அலைபேசியைத் தருமாறு புடவைக் கடை முதலாளியிடம் கேட்டுள்ளனர்.

அவர் தன்னிடம் அலைபேசி இல்லை என்று கூறியதுடன், ஊழியரை அலைபேசியை வழங்கி உதவுமாறு கேட்டுள்ளார்.

இதன்போது, முதலாளியின் வேண்டுகோளுக்கமைய ஊழியர் தனது அலைபேசியை அந்த இளைஞர்களுக்கு வழங்கியுள்ளார்.

அதனைப் பெற்ற ஒருவர், அழைப்பு ஒன்றை எடுப்பது போன்று பாவனை செய்தவாறு மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் ஏற மற்றயவர் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று தப்பித்தனர்.

அலைபேசியை பறிகொடுத்தவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். துரிதமாகச் செயற்பட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறுகுற்றப்பிரிவினர், கொள்ளையர்களின் வீட்டுக்கே சென்றனர்.

யாழ்ப்பாணம் மடம் வீதியிலுள்ள வீட்டில் இருந்த கொள்ளையர் பொலிஸாரைக் கண்டதும் சட்டைப் பையிலிருந்த அலைபேசியை எடுத்துக்கொடுத்தார். அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் இன்று (1) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரிடம் மீட்கப்பட்ட அலைபேசியும் மன்றில் முன்வைக்கப்பட்டது. மற்றொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டை ஆராய்ந்த நீதிவான், எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .