2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தி இல்லை

எம். றொசாந்த்   / 2017 ஒக்டோபர் 21 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியுடனான சந்திப்பில் எமக்கு திருப்தி இல்லை மேலும் அவர் எமக்கு சாதகமா பதிலை வழங்காமையானது ஏமாற்றத்தை அளித்துள்ளது என, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்

ஜனாதிபதியுடனான சந்திப்புத் தொடர்பில்,யாழ்.பல்கலைகழகத்தில் , அனைத்துபீட மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்னமேனன் , கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் அனுராஜ் மற்றும் சட்டபீட மாணவன் தனஜயன் ஆகியோரிடம் கேட்டப்போது, அவர்கள் இதைத் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் , 

அநுராதபுரச் சிறைச்சாலையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, பல்கலைகழக சமூகத்தால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

இதனை அடுத்து, ஜனாதிபதியுடன் நேரடியாக சந்தித்து, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி, நிரத்தர தீர்வினை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக, வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே எமக்கு உறுதி அளித்திருந்தார். 

அதனை  நம்பி, எமது போராட்டத்தை கைவிட்டு, ஜனாதிபதியை கொழும்பில் சந்தித்தோம். ஆனால் அந்தச் சந்திப்பு பயனற்றுப்போனது. ஜனாதிபதி எமக்கு உரிய பதிலை வழங்கவில்லை.

மேலும், நீதியமைச்சரும் , சட்டமா அதிபரும் வெளிநாட்டில் உள்ளமையால், அவர்கள் நாடு திரும்பியதும் , அவர்களுடன் கலந்துரையாடியப் பின்னர் எதிர்வரும் புதன்கிழமைக்கு முதல் நல்லதொரு முடிவினை கூறுவதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன் அரசியல் கைதிகளின் வழக்குகள் மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட வேண்டும், அரசியல் கைதிகளை பாலியல் குற்றவாளிகள் , போதை பொருள் குற்றவாளிகள் மரணதண்டனை கைதிகளுடன் ஒரே சிறை கூடத்தில் தடுத்து வைக்காமல் அவர்களை பிறிதொரு சிறைக்கூடத்தில் தடுத்து வைக்க வேண்டும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் , பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் , கடந்த வருடம் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவரது குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் அத்துடன் அவர்களின் கொலைக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட ஐந்தம்சக் கோரிக்கைகளையும் ஜனாதிபதியிடம் முன் வைத்துள்ளோம். 

இந்தக் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி தீர்க்கமான பதில்களை வழங்காமல் மழுப்பலான பதில்களையே வழங்கி இருந்தார். 

அதேவேளை அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில், தமிழ் அரசியல் வாதிகள் தமக்குள்ள முட்டி மோதிக்கொள்கின்றார்கள். பிரச்சனையை தீர்ப்பதில் அக்கறையின்றி செயற்படுகின்றார்கள். 

ஆனால் நமது தமிழ் அரசியல் வாதிகள் ஜனாதிபதியுடன் இணைந்து தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டு உள்ளனர். 

தமிழ் அரசியல் வாதிகள் தமக்குள்ள முட்டி மோதாமல் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லதொரு தீர்வு கிடைக்க ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும். 

இதேவேளை கிழக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை கிழக்கு மாகாணத்தில் பாரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

குறித்த போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கோருகின்றோம். 

 அதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் யாழ்.பல்கலைகழக மாணவர்களாலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன என அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .