2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

டில்லு குழுவின் தண்டனை உறுதியானது

எம். றொசாந்த்   / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், மடம் வீதியில் குடும்பத் தலைவர் ஒருவரை வாளால் வெட்டிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய  8 பேருக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தண்டணையை யாழ்ப்பாணம் மேல்  நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (12) உறுதி செய்தார்.

பொலிஸாரால் டில்லு குறூப் என அழைக்கப்பட்ட இளைஞர்கள் குழுவைச் சேர்ந்த 8 பேருக்கே, தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மடம் வீதியில், 2012ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் திகதி விமலராஜன் விக்னராஜா என்பவரை வாளால் வெட்டிக்காயப்படுத்திய குற்றச்சாட்டில் 9 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

5 ஆண்டுகள் விசாரணைகளின் நிறைவில், கடந்த மே 16ஆம் திகதி, சத்தியநாதன் அன்ரனிஸ் அல்லது டில்லு, அரவிந்தன் அலெக்ஸ் மற்றும் சிவேந்திரன் கலிஸ்ரன் ஆகியோருக்கு  3 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், விஜயரத்தினம் ஜனுசன், ஜெகதீஸ்வரன் டிரெக்ஸ்காந்தன், அருந்தவராஜ் செந்தூரன், பெனடிக்ட் வெஸ்லி ஏபிரகாம், தேவராசா ஹரிசன் ஆகியோருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. 

அத்துடன், பாதிக்கப்பட்டவருக்கு 8 குற்றவாளிகளும் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அதனைச் செலுத்தத் தவறின் ஓர் ஆண்டு சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, நீதிவான் நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து குற்றவாளிகள் 8 பேர் சார்பிலும், அவர்களது சட்டத்தரணிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தனர்.

இந்த நிலையில் 8 பேரின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இன்று (12) உறுதி செய்து, 8 சந்தேகநபர்களும் தலா 1,500 ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும்” என்று உத்தரவிட்டார்.

அத்துடன், மேன்முறையீட்டு மனு மீது தீர்ப்பளிக்கப்பட்டதால் மேல் நீதிமன்றால் பிணை வழங்கப்பட்ட இருவரினதும் தண்டனைக்காலம், நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாவதை நீதிவான் நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .