2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்’

க. அகரன்   / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர், இன்று (27) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையானது, வழிநடத்தல் குழுவின் முழுமையான ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட அறிக்கையல்ல. இந்த வழிநடத்தல்குழு 73 தடவைகள் கூடிப் பேசியும்கூட என்னென்ன விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டது என்பது பற்றிய ஒரு விடயமும் குறிப்பிடப்படவில்லை.

அரசியல் சாசன சபையில் அங்கம் வகித்த சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கையெழுத்திட்டு ஒரு பின்னிணைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆகவே, இந்த இடைக்கால அறிக்கை என்பது புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதற்கான அடிப்படை விடயங்களைக் கொண்டிருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

மிகவும் இரகசியமான முறையில் இங்கிலாந்திலும் சிங்கப்பூரிலும் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் ஒரு சில புலம்பெயர்க் குழுக்களும் தமிழரசுக் கட்சியினரும் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடாத்தியதாக அறிந்தோம். இவ்வாறு வெளிப்படுத்தற்தன்மையற்ற விவாதம் இடம்பெற்றது. 

ஒற்றையாட்சியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியினர் கூறி வந்தாலும் கூட, சிங்களத்தில் ஒற்றையாட்சி எனும் பதமே இன்னமும் பாவிக்கப்படுகிறது.

மதசார்பற்ற நாடு என்ற கோரிக்கை மறுதலிக்கப்பட்டு, பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுய நிர்ணய உரிமை, சுயாட்சி போன்ற சகல விடயங்களும் மறுதலிக்கப்பட்டுள்ளது.

வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பாக வழிகாட்டல் குழுவில் பேசப்படவில்லை. முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாட்டைக் கணக்கிலெடுத்து, வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இரண்டு மாற்றுக் கருத்துக்களை ஒருங்கிணைப்புக்குழுவில் முன்வைத்தது.

இந்த இடைக்கால அறிக்கை என்பது இறுதியானதல்ல. இது ஒரு அரசியல் சாசன வரைபுமல்ல. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்து ஒரு சுயாட்சியுடன் கூடிய அரசியல் சாசனமாக வருமா என்பதில் எமக்கு நிறையவே ஐயங்கள் உள்ளது.

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேசிவந்த சம்பந்தன், தனது பிழையான அணுகுமுறையால் எமக்குக் கிட்டிய மற்றொரு வாய்ப்பை நழுவவிட்டுள்ளார் என்றே கருதுகின்றோம்.

ஆனால் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது மாறி, மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவது என்ற நிலையிலிருந்துதான் இப்பொழுது அதிகாரப்பகிர்வு என்ற விடயம் பார்க்கப்படுவதாகவும் தோன்றுகிறது.

இடைக்கால அறிக்கையானது பிணக்குகளைத் தீர்க்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டதாகத் தோன்றவில்லை. மாறாக, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதை நோக்கமாகக்கொண்டும் குறுகிய கட்சி அரசியல் இலாபங்களை நோக்கமாகக் கொண்டும் வரையப்பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .