2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘தென்னிலங்கைச் சக்திகளைப் போன்று, தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்’

Editorial   / 2018 பெப்ரவரி 21 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

“சர்வதேச அரங்கில் தப்பிக் கொள்வதுக்காக தென்னிலங்கைச் சக்திகள் ஒன்றிணைவது போன்று, தமிழினத்தைக் காக்க தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். மேலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை முதல் அரசியல் தீர்வு வரையான பயணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து பயணிக்க முன்வர வேண்டுமென” ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். நகரிலுள்ள விடுதியொன்றில் நேற்று (20) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒரு சில சக்திகள் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில், தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்த்தால் வடக்கு கிழக்கில் கூட்டமைப்புக்கான ஆதரவு அசையாமல் இருப்பதை உணர முடியும்.

இத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி என்பன தலா இரண்டு சபைகளிலேயே பெரும்பான்மையைப் பெற்றிருக்கின்ற போது, ஏனைய அனைத்துச் சபைகளிலும் கூட்டமைப்பே பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையில் பாரிய வேறுபாடுகள் கிடையாது. ஆகவே பொதுக் கொள்கையின் அடிப்படையில் அரசியல் தீர்வொன்றை வென்றெடுப்பதற்கு ஏதுவாக ஒன்றுபட்டு புரிந்துணர்வுடன் செயற்பட முன் வரவேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம்.

கடந்த காலங்களிலும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையில் எத்தனையோ வேறுபாடுகள், கருத்து முரண்பாடுகள் மட்டுமல்லாது மோதல்களும் இருந்த நிலையில் தமிழ் மக்களுக்காக ஒன்றுபட்டுச் செயற்பட்டிருக்கின்றோம். ஆகவே தற்போது தமிழ் மக்கள் எம்மிடம் எதிர்பார்க்கின்ற அடிப்படைப் பிரச்சனைகளுக்கான தீர்வு முதல் அரசியல் தீர்வு வரையிலான செயற்பாடுகளுக்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியது அவசியம்.

தென்னிலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் குழப்பங்களால் எதிர்காலத்தில் என்ன நடக்குமென்று ஆருடம் கூற முடியாத நிலைமைகள் இருக்கின்றன. ஆகையினால் தீர்வு முயற்சி புறந்தள்ளிச் செயற்பட முடியாத நிலையில் கூட்டமைப்பு தீர்வை நோக்கிய எதிர்பார்ப்பில் பயணித்துக் கொண்டிருக்கிறது. எனவே இத்தகைய நிலைமைகளைச் சிந்தித்து ஒன்றாக இணைந்து செயற்பட கட்சிகள் முன்வர வேண்டும்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலிலேயே தமிழ்க் கட்சிகளாகிய நாங்கள் பிரிந்து நின்றதால் பேரினவாதக் கட்சிகள் தமிழர் நிலங்களில் ஊடுருவியிருக்கின்றன.

இவ்வாறு குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தொலைதூரக் கண்ணோட்டமின்றி நாங்கள் செயற்படுவோமாக இருந்தால் பேரினவாதக் கட்சிகளே மீளவும் இங்கு பலமாக ஊடுருவுகின்ற நிலையே ஏற்படும்.

இதன் அர்த்தம் எல்லோரும் கூட்டமைப்பில் இணையுங்கள் என்றல்ல. ஆனாலும் சகலரும் கூட்டமைப்பில் இணைவதற்கான கதவுகள் திறந்தே உள்ளன. ஆகையினால் பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வை நோக்கிய பயணத்துக்கான கொள்கைத் திட்டங்களை வகுத்து இணைந்து செயற்பட வேண்டுமென்றே கேட்கின்றோம்.

இதேவேளை கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில் கருணா மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரையும் உள்வாங்குவதுக்கான சாத்தியங்கள் இருக்கிறதா என கேள்வி எழுப்பிய போது,

தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று பேசுகின்ற போது எவரையும் ஒதுக்கி வைத்துப் பேச விரும்பவில்லை. அதற்காக கூட்டமைப்பில் இணையுமாறு அவர்களைக் கோரவில்லை.

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் அரசியல் தீர்வு குறித்தான விடயங்களில் பொது வேலைத் திட்டத்தினடிப்படையில் கொள்கையளவில் இணைந்து செயற்படுமாறே கேட்கின்றோம். கூட்டாக இணைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதன் காரணமாகவே இந்த அழைப்பை விடுத்திருக்கின்றோம்.

மேலும் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சவாலை எதிர் கொள்ள வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில் தப்பித்துக் கொள்வதுக்காக தென்னிலங்கைச் சக்திகள் இணைகின்றமை போன்று தமிழினத்தைக் காக்க தமிழ்த் தேசிய சக்திகள் இணைய வேண்டும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .