2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொண்டமனாறு கடற்கரையில் இந்தியக் கழிவுகள்

Editorial   / 2017 நவம்பர் 19 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்  

இந்தியாவின் மருத்துவக் கழிவுகள் மற்றும் கண்ணாடிப் போத்தல்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள், யாழ்., தொண்டமனாறு கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்குவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  

யாழ். வடமராட்சி, தொண்டமனாறு, அக்கரை கடற்கரைப் பகுதிகளில், இவ்வாறான கழிவுப் பொருட்கள், கடந்த புதன்கிழமை முதல் கரையொதுங்கி வருகின்றன. அவை, இந்தியாவில் இருந்து வந்தே கரையொதுங்குகின்றன என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.  

மருத்துவக் கழிவுகள், காலாவதியான மருந்துப் பொருட்கள், மாத்திரைகள், கண்ணாடி (மருந்து) போத்தல்கள், மருந்து ஊசிகள் உள்ளிட்டவற்றுடன், அழகுசாதன கிறீம் போத்தல்கள், டியூப் வகைகள், மதுபான போத்தல்கள், லைட்டர்கள், சுவையூட்டப்பட பாக்கு வகைகள் என பலதரப்பட்ட கழிவுப் பொருட்களே, கடற்கரையை அண்டிய பகுதிகளில் கரையொதுங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

இது தொடர்பில், அப்பகுதி மீனவர் ஒருவர் கூறியதாவது,  

“இந்தக் கழிவுப் பொருட்கள், திடீரென செவ்வாய்க்கிழமை (14) முதல் கரையொதுங்குகின்றன. இவை, இந்தியக் கடலில் கொட்டப்பட்ட கழிவுகளாக இருக்கலாம். யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாகவும் காற்றின் திசை மாற்றம் காரணமாகவும், இவை இலங்கை கடற்பரப்பை நோக்கி வந்து கரையொதுங்கி இருக்கலாம். மீண்டும் காற்று திசை மாறும் போது, மேலும் பல கழிவுகள் கரையொதுங்க வாய்ப்புள்ளது.  

“இந்தக் கழிவு பொருட்களில் உள்ள சில மாதிரிகளை வைத்துப் பார்க்கும் போது, இவை கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கடலில் கொட்டப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றோம். அத்துடன், இந்தக் கழிவுப் பொருட்கள், மீன்பிடி வலைகளிலும் அகப்பட்டுள்ளன.  

“கடந்த புதன்கிழமை (15) பெருமளவான கழிவுப் பொருட்கள், கடற்கரையை அண்டிய பகுதிகளில் கரையொதுங்கி இருந்தன. அது தொடர்பில், வல்வெட்டித்துறை நகரசபைக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து கழிவுப் பொருட்களைப் பார்வையிட்ட பின்னர், அவற்றை கடற்கரையில் இருந்து உழவு இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தினார்கள்” என, அந்த மீனவர் கூறினார்.  

இது தொடர்பில், வல்வெட்டித்துறை நகர சபைக்கு உட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சகிதன் கூறுகையில், “இந்தியாவில் இருந்து கொட்டப்பட்ட கழிவுகள், இலங்கைக் கடற்கறைகளில் கரையொதுங்கி உள்ளதாக, தகவல்கள் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்றிருந்தோம். மருந்துப் போத்தல்கள் உட்பட மதுபான போத்தல்கள், லைட்டர்கள் எனப் பல பொருட்கள் கரையொதுங்கி இருந்தன. அவற்றை, நகர சபை ஊழியர்கள் மூலம், கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளோம்” என்றார்.  

இதேவேளை, மேற்படிக் கழிவுப் பொருட்களை, தமிழக அரசாங்கம் படகுகள் மூலம் நடுக்கடலுக்கு கொண்டுவந்து கடலினுள் கொட்டுகின்றதா என்ற சந்தேகமும், மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.  

இதனால், இந்தக் கழிவுப் பொருட்கள் கரையொதுங்குவது தொடர்பில் அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி, விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கடலினுள் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட கழிவு பொருட்களைக் கொட்டுவதால், கடல் வளங்கள் பாதிப்படைந்து, மீன் இனங்கள் அழிவடைவது மாத்திரமின்றி, சுற்றுச்சூழலுக்கும் சவால் விடும் அளவில் பாதிப்புகள் ஏற்படலாம் என, அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .