2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘நடுநிலை வகிப்போம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன் 

 

எமது கோரிக்கைகளுக்கு ஆதரவு அல்லது சம்மதம் கிடைக்காதவிடத்து, யாருக்கும் ஆதரவளித்துப் பிரயோசனமில்லையென, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 

இதனால், தாங்கள் நடுநிலை வகிக்கும் முடிவையே எடுப்போமெனவும் அந்த
மு​டிவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். 

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில், நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், இந்த விவகாரத்தில், கூட்டமைப்பினர் எத்தகைய முடிவுகளை எடுக்கப்போகின்றனர் என்பது தொடர்பில் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஆகவே, இந்த நேரத்தில் சரியானதொரு முடிவை தமிழ்த் தரப்புகள் எடுக்க வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.

இந்த நிலைமையை, தமிழ் மக்களின் நலன் சார்ந்தே அணுக வேண்டுமென வலியுறுத்திய அவர், இதற்கமைய, தமிழ் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

குறிப்பாக, ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல், வடக்கு - கிழக்கில் இராணுவத்தை குறைத்தல், காணி அபகரிப்பைத் தடுத்து நிறுத்தல், வடக்கு - கிழக்கு இணைப்பை ஏற்படுத்தல், இனப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுத்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் உள்ளிட்ட மிக முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக உத்தரவாதம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை, அவ்விருவரிடமும் தமிழ்த் தலைமைகள் முன்வைக்க வேண்டுமென, அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கோரிக்கைகளை, அந்த இருவரில் ஒருவரேனும் ஏற்றுக்கொண்டால் அவருக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்ததுடன், இதனை யாரும் ஏற்காவிடத்து, அவர்களுக்கு ஆதரவளிப்பது அர்த்தமற்றதெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, நடுநிலை விக்கப்பது தான் சிறந்ததெனத் தெரிவித்த அவர், இதனையே தன்னுடைய கட்சி செய்யுமெனவும் குறிப்பிட்டார்.

அதேபோல, இந்த நிலைப்பாட்டையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எடுக்க வேண்டுமென, அவர் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .