2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’நல்லாட்சியிலும் சிங்களக் குடியேற்றத்துக்கு தீர்வு இல்லை’

Editorial   / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன் 

வட- கிழக்கு மாகாணங்களின் எல்லைக் கிராமங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு நாடாளுமன்றில் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என, நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். 

மேலும், நல்லாட்சிக் காலத்திலும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து, நேற்று (06) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

இங்கு, கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், 

“கிழக்கு மாகாணத்தின் எல்லைக் கிராமங்களில் பௌத்த மத துறவிகளால் பெரும்பான்மையினர் வாழ்ந்த பகுதிகளாக தமிழ் மக்களுடைய நிலங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, சிங்களக் குடியேற்றங்களால் நிரப்பப்படுகின்றன. அதேபோல், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரால் திட்டமிட்ட முஸ்லிம் குடியேற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் வட- கிழக்கு மாகாணங்களில் 246 இடங்கள் தொல்லியல் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

“இவ்வாறு, வட - கிழக்கு மாகாணங்களில் போருக்குப் பின்னர் தமிழர்களின் நிலங்களைப் பூரணமாக அபகரிப்பதற்குச் சதித் திட்டம் தீட்டப்படுகின்றது” என்றார். 

இங்கு, வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கருத்துத் தெரிவிக்கையில்,  

“கிழக்கு மாகாணத்தை ஒத்ததாக வட மாகாணத்திலும் எல்லைக் கிராமங்களில் குறிப்பாக முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் போர் காரணமாகவும், பெரும்பான்மையினரின் தாக்குதல்கள் காரணமாகவும் மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் பெரும்பான்மையினர் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டனர்.  

“பல தமிழ் கிராமங்கள் சிங்களப் பெயரில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, வவுனியா மாவட்டத்தில் தமிழ் கிராமம் ஒன்றுக்கு ‘நாமல் புர’ என்ற சிங்களப் பெயர் சூட்டியிருக்கின்றனர். இந்நிலையில், வட - கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு 3ஆம் தரப்பினரின் மத்தியஸ்தம் தேவைப்படுகின்றது” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .