2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நாகர்கோவில் சம்பவம்: பிரதான சந்தேகநபரை கைது செய்ய முயற்சி

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - நாகர்கோவில் பகுதியில், தை பொங்கல் தினத்தன்று, இராணுவ வீரர்களுக்கும் இளைஞர்கள் சிலருக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படும் தர்க்கத்தின் தொடர்ச்சியாக, நேற்று (18) மாலை, நாகர்கோவில் இராணுவ சீருடை மற்றும் சிவில் உடையில் ஆயுதங்களுடன் வந்த படையினர் இளைஞர் ஒருவரை கைது செய்ய முயற்சித்துள்ளதுடன், அப்பகுதியில் நின்ற வயதானவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான ஐங்கரன் என்ற இளைஞனை இராணுவத்தினா் தேடிவந்தனர். இந்நிலையில் குறித்த இளைஞனை, நாகர்கோவில் கிழக்கு கடற்கரையில், நேற்று காலை, இராணுவப் புலனாய்வாளர்கள் கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

எனினும், அவர் கடலில் குதித்து நீந்தி தப்பிச் சென்ற நிலையில், கரையோரத்தில் கரைவலைப்பாடுகளில் நின்றவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரியவருகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவத்தின் கைது செய்ய முயற்சித்ததாக கூறப்படும் ஐங்கரன் என்பவரின் மனைவி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், தனது கணவனை தேடவில்லை என நீதிமன்றில் கூறப்பட்டிருக்கின்றதெனவும் ஆனாலும் நேற்று காலை தொழிலுக்காக கடற்கரையில் நின்ற கணவனை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பலர் சுற்றிவளைத்து, கைது செய்ய முயற்சித்தபோது, அவர் கடலில் குதித்து எங்கோ சென்றுவிட்டாரெனவும் கூறினார்.

இதையடுத்து, கரைவலைப்பாட்டுக்கு தாங்கள் சென்றபோது, அங்கே தங்களுடைய அலைபேசிகள் அனைத்தும் பறிக்கப்பட்டதுடன், முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள்  என பார்க்காமல், சகலரது மீதும் இராணுவம் தாக்குதல் நடத்தியதெனவும், அவர் தெரிவித்தார்.

“அதில், ஐங்கரனின் இரு சகோதரிகளும் உள்ளடக்கம். அதில் ஒரு சகோதரி கர்ப்பவதியாக இருக்கும் நிலையில், அவரையும் இராணுவத்தினர் தாக்கியதுடன், கைது செய்து கொண்டு செல்லபோகிறோம் எனவும் அச்சுறுத்தினர்” எனவும் கூறினார்.

அதேபோல், அலைபேசியுடன் அங்குவந்த சிறுவன் ஒருவன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இராணுவச் சீருடை மற்றும் சிவில் உடையில் ஆயுதங்களுடன் வந்தவர்களே தாக்குதல் நடத்தினார்களெனவும் கூறினார்.

 இது தொடர்பாக நான் 119 பொலிஸாருக்கு இரு தடவைகள் முறைப்பாடு கொடுத்ததாகத் தெரிவித்த அவர், ஆனால் இறுதி வரை வரவில்லையெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X