2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘நினைவேந்தலை வடமாகாண சபையே செய்தது’

எம். றொசாந்த்   / 2018 மே 31 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

“முள்ளிவாய்க்கால் நினைவு தினத்துக்கான அனைத்து ஏற்பாட்டையும், செலவுகளையும் வடமாகாண சபையே செய்தது” என அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்று (31) கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது.

அதன்போது, எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முள்ளிவாய்க்கால் நினைவு தின செலவுகளுக்கு என மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளத்தில் பெறப்பட்ட தனது பங்கான 7 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்ப தருமாறு கோரி இருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் போதே அவைத்தலைவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில், பந்தல் போட்டது, கதிரை போட்டது, பந்தங்களில் எண்ணெய் தோய்த்தது, பந்தங்களை நாட்டியது என அனைத்து செலவுகளும் ஒழுங்கமைப்பும் வடமாகாண சபையே செய்தது.

முதலமைச்சர் தீப்பந்தம் எடுத்துத்கொடுக்க, பிரதான சுடரை ஏற்றிய சிறுமியை நினைவேந்தல் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு அழைத்தமையும் மாகாண சபையே.

நினைவேந்தல் நாள் அன்று காலை 10 மணிவரையில் மாகாண சபையே நிகழ்வை ஒழுங்கமைத்தது. ஆனால் திடீரென வந்த சிலர் மைக்கை பறித்து நிகழ்வை தாம் நடத்த தொடங்கினார்கள்.

அந்த நேரத்தில் நாம் பயந்து ஒதுங்கவில்லை. அது ஒரு புனிதமான நிகழ்வு. அதில் குழப்பங்கள் ஏற்படாது நிகழ்வு நடந்து முடிய வேண்டும் என்பதனால் ஒதுங்கி நின்றோம்.

இதற்கு மேலும் பல விடயங்களை சொல்லலாம். ஆனால் அந்த புனித நிகழ்வை பற்றி இங்கே கதைத்து அதனை விவாதத்துக்கு கொண்டு வர விரும்பாத காரணத்தால் அதனை அத்துடன் விடுகிறேன்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X