2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நிலக்கீழ் நீரை மாசுபடுத்தியமை உறுதி; ரூ. 20 மில். நட்டஈடு வழங்க நொதர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு

Editorial   / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கமல்

யாழ்ப்பாணம், சுன்னாகத்திலுள்ள நிலத்தடி நீரை மாசுப்படுத்தியதற்காக, பாதிக்கப்பட்ட அப்பிரதேசத்தைச் சேர்ந்த 500 பேருக்கு 20 மில்லியன் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்குமாறு  உயர் நீதிமன்றம், நேற்று (04) தீர்ப்பளித்தது.

மின்னுற்பத்தி நிறுவனமான நொதேர்ன் பவர் தனியார் மின்னுற்பத்தி நிறுவனத்துக்கே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   

சிலவேளைகளில், 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறாயின், மிகமோசமாக பாதிக்கப்பட்ட பிரதான குடியிருப்பாளர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், அதனை மூன்றுமாத காலத்துக்குள் செலுத்தி முடிக்கவேண்டுமெனத் கட்டளையிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன மற்றும்  எல்.டி.பி தெஹிதெனிய ஆகியோரடங்கிய நீதியரசர் குழாமால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை,  மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புச் சபை ஆகியவற்றில் காணப்பட்ட குறைபாடுகள், செயலற்ற தன்மைகள் காரணமாகவே இவ்வாறானதொரு நிலைமைக்கு மக்கள் முகம் கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக, தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளன உயர்நீதிமன்றம், அவ்விரு நிறுவனங்களும் தன்னிச்சையாகவும் நியாயமற்றதாகவும் நடந்துகொண்டன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

எண்ணெய், கிறீஸ் மற்றும் பீடெக்ஸ் போன்றவை, நிலத்தடி குடிநீரில் கலந்திருப்பது, சுன்னாகம் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களின் அடிப்படை உரிமை மீறலாகும். அரசமைப்பின் பிரகாரம், அம்மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என, மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றாடல் ஆய்வாளர். பேராசிரியர்  ரவீந்தர காரியவசம், இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மேற்படி விவகாரம் தொடர்பில், பொறுப்புகூற வேண்டிய அரச நிறுவனங்கள் முறையாக செயற்படவில்லையென அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எண்ணெய், கிறீஸ், பீடெக்ஸ் ஆகியவை நிலத்தடி நீரில் கலந்திருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே, பிரதான குடியிருப்பாளர்களுக்கு அந்த இழப்பீடு வழங்கப்படும்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையும் முதலீட்டுச் சபையும் அரசமைப்பின் சில உறுப்புரைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாகத் தனது தீர்ப்பில் நீதிமன்றம்.  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில்  இதுபோன்ற வழக்குகளில் வழங்கப்பட்ட பல தீர்ப்புகளை கருத்திற்கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகக் காணப்படுகிறது என்பதுடன், இது ஒரு மைல்கல் தீர்ப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பாக, நொதேர்ன் பவர் தனியார் நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கெனவே, தள்ளுபடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X