2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பல இணைத்தலைவர்களால் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு இடையூறு

Editorial   / 2018 மார்ச் 14 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் மாகாண முதலமைச்சர் மற்றும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவருமே இணைத்தலைவர்களாக இருப்பது வழக்கம். ஆனால் அரசாங்கம் தன் நலன்களுக்காக பல அரசியல்வாதிகளை இணைதலைவர்களாக நியமித்திருப்பதாலேயே ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கான திகதியை தீர்மானிப்பதில் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 118ஆவது அமர்வு நேற்று (13) இடம்பெற்றது.

இதன்போது, மாகாணசபை அமர்வு நடைபெறும் நாட்களிலும், வேறு நிகழ்வுகள் இடம்பெறும் நாட்களிலும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடாத்தப்படுவதால், சிக்கல்களை எதிர்கொள்வதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த முதமைச்சர்,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலப்பகுதியில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஒருவரும் இணைத்தலைவர்களாக இருப்பார்கள். அந்த நடைமுறை தொடர்ந்து வந்த நிலையில், இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அது மாற்றப்பட்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் இணைதலைவர்களாக வேறு சில அரசியல்வாதிகளும் இணைக்கப்பட்டார்கள்.

நான் ஜனாதிபதியை சந்தித்த போது, சில அரசியல் நலன்களுக்காக இவ்வாறு செய்துள்ளீர்கள். ஆனால் பல்வேறு சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றேன். மேலும் இவ்வாறு பல அரசியல்வாதிகள் இணைதலைவர்களாக நியமிக்கப்பட்டிருப்பதால் கூட்டத்தில் பேச வேண்டிய விடயங்களை கூட அவர்கள் இணைத்தலைவர் ஆசனத்திலிருந்து பேசி கொண்டிருக்கின்றார்கள்.

இதனைக் கூறியதால் எனக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இப்போது மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கான திகதிகள் ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 34 பிரதேச செயலகங்கள் மற்றும் 5 மாவட்ட செயலகங்கள் என 39 ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு நான் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது.

இவ்வாறான நிலை மாற்றப்படா விட்டால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டனவோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போகும் என தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம்,

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களால் உருவாகும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகளைக் குற்றம் சொல்லிப்பயனில்லை. ஜனாதிபதியே பொறுப்பாளியாக வேண்டும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .