2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாடசாலைகளை ஆரம்பிக்கும் நேர மாற்றம் தொடர்பில் ஆராயப்படும்

Editorial   / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடமாகாண பாடசாலைகளை ஆரம்பிக்கும் நேரங்கள் மற்றும் மாணவர்களின் ஆடைகள் என்பனவற்றில் மாற்றங்களைக் கொண்டு வருவது தொடர்பில் மாகாண சபை அமர்வில் ஆராயப்பட்டுள்ளது.

மாகாண சபையின் 117 ஆவது அமர்வு நேற்று (27) இடம்பெற்றது.

இதன்போது மாகாண பாடசாலைகளை 8 மணிக்கு மீள ஆரம்பிப்பது குறித்து ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், வடக்கு மாகாணப் பாடசாலைகள் முன்னர் 8 மணிக்கே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு தற்போது 7.30 மணிக்கு ஆரம்பமாகின்றது. அதில் மீளவும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமென கடந்த அமர்வுகளின் போது குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்களும் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பாடசாலைகள் 7.30 ஆரம்பிப்பதால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருவதுடன் பல பாதிப்புக்களுக்கும் உள்ளாகியுள்ளதாக அமைச்சர் அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டினார்.

இதே கருத்தை முன்வைத்த அவைத் தலைவர் சிவஞானமும் பாடசாலைகளை 8 மணிக்கே மீளவும் ஆரம்பிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இதன்போது குறுக்கிட்ட முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பாடசாலைகளை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதில் முன்னர் இடையூறுகள் எதிர்ப்புகள் இருந்த போதும், அதனை பின்னர் பலரும் வரவேற்றிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் மீளவும் பாடசாலைகளை பழைய நேரத்துக்கு மாற்றுவதன் மூலமாக சீரான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியுமா என்றும் கேள்யெழுப்பினார்.

பாடசாலை நேரங்களில் மாற்றங்கள் வேண்டுமென கடந்த அமர்வுகளின் போது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அதனை நடைமுறைப்படுத்தாமை அல்லது அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து சபைக்குத் தெரியப்படுத்தவில்லை என்றும் எனவே தற்போதைய நேரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து அமைச்சர் மீளாய்வு செய்ய வேண்டுமென்றும் சிவஞானம் குறிப்பிட்டார்.

இவ்வாறு பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்த நிலையில், கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தவிடயம் தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுக்கப்பட்டு, அடுத்த அமர்வில் தெரியப்படுத்தப்படுமென அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை மாகாண பாடசாலை மாணவர்களின் ஆடைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்தும் இதன்போது பரிசீலிக்கப்பட்டது. அது குறித்தும் கலந்துரையாடி இறுதி முடிவை அடுத்த அமர்வில் அறிவிப்பதாக கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .