2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘பிரதமரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது’

Editorial   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து, இன்னும் உங்களை அழிப்போம் என்கிற எண்ணக் கருவுடன் உள்ளது. இராணுவம் புரிந்த குற்றங்களை நாங்கள் மறப்பதுக்கு, அரசாங்கம் உண்மையைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்ட வேண்டும். அதன் பின்னர் தீர்வு என்ன என்பது பற்றி தமிழர்கள் முடிவெடுக்க முடியும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

யாழில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில், கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் அங்கு உரையாற்றும் போது, போர்க்குற்ற விசாரணைகள் வேண்டாம். மறப்போம், மன்னிப்போம் என்று உரையாற்றினார். இலங்கை அரசாங்கத்தால் எந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ, அந்த மக்களின் மண்ணில் இருந்து ஒரு புதுவிதமான கருத்தை பிரதமர் தெரிவித்துள்ளார். மறப்போம்,  மன்னிப்போம் என்ற வார்த்தைகளோடு, எல்லாவற்றையும் மூடி விடுகின்ற செயற்பாட்டை முன்னெடுத்திருந்தார். பிரதமர் தலைமையில் கூட்டம் நடைபெற்ற போது, அவரின் உரைக்கு குறுக்காக அநாகரீகமாக பேச முடியாத சூழல் இருந்தது.

இறுதி யுத்தத்தில் 1 இலட்சத்து 46 ஆயிரம் பேர் காணாமல் போயும், படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர். பல குழந்தைகள் பட்டினியால் கொல்லப்பட்டுள்ளனர். 4 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் முள்ளிவாய்க்கால் வரை சென்ற போது, 75 ஆயிரம் பேர் தான் மாத்திரமே இருந்தார்கள். பொருளாதார தடைகளை விதித்து, உணவுகளை அனுப்பாது, பட்டினி போட்டு, இதே இலங்கை அரசாங்கம் கொலை செய்த போது, கருத்துக்களை வெளியிடாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து, இன்னும் உங்களை அழிப்போம் என்கிற எண்ணக் கருவுடன் உள்ளது.

பல பெண்கள் தமது கணவனை, பிள்ளைகளை, கையில் கொடுத்தவர்கள் கண்கண்ட சாட்சியாக இருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் இல்லை என்பதைப் போன்று, விசாரணை செய்ய முடியாதென்பது போன்ற கருத்துக்களை முன்வைப்பது மிகப் பாரதூரமான விடயமாகும்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெனிவா அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் கூடிய உள்ளக விசாரணையை முன்னெடுப்பதாக அளித்த உறுதி மொழியின் பிரகாரம், தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுத்தல். உண்மையைக் கண்டறிந்த பின்னர், முதற்படி அவர்கள் முன்னோக்கி நகர வேண்டும்.

மறப்போம் மன்னிப்போம் என்று அவர் கூறிய உள் அர்த்தம், இராணுவம் குற்றம் புரிந்திருக்கின்றது, தமது அரசாங்கம் கொடுமை இழைத்துள்ளது என்பதனை மறைமுகமாக ஏற்றுக்கொண்டாலும் கூட, அதை நாங்கள் மறப்பதானால், அரசாங்கம் உண்மையைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்ட வேண்டும். அதற்குப் பின்னரே, என்ன தீர்ப்பு சொல்வது என்று தமிழ் மக்கள் சிந்திக்க முடியும்.

மறப்பதா? மன்னிப்பதா? என்பது பற்றிய முடிவுக்கு தமிழ் மக்கள் வர முடியும். நாங்கள் குற்றம் இழைத்திருந்தோம். எமது இராணுவம் இவ்வளவு தமிழ் மக்களை அழித்தது, எமது நாட்டில் இவ்வளவு சொத்துக்கள் அழிக்கப்பட்டன, தமிழர்கள் தெருத் தெருவாக இழுத்துக் கொலை செய்யப்பட்டார்கள்.

பாதுகாப்பு வலயம் என்று சொல்லப்பட்ட வலயத்துக்குள் மக்கள் வரவழைக்கப்பட்டு, கொத்தணிக் குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசி அந்த மக்கள் மீது பாரிய இனஅழிப்பு முன்னெடுக்கப்பட்டது என்பதை அரசாங்கம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பின்னர், அதற்கான உண்மையைக் கண்டறிவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையும் சாட்சியங்களையும் பெற்று அதன் பின்னர், அதற்கான தீர்வு என்ன என்பது பற்றிப் பார்ப்போம். எல்லாவற்றையும் மூடி மறைத்து, சிங்கள குடியறே;றங்களையும், பௌத்த சின்னங்களையும் அமைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லும் விடயங்கள் எங்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல.

அன்றையதினம் உடனடியாக பதிலளிக்க கூடிய வகையில் விவாதத்துக்குரிய இடமாக இருக்காத காரணத்தினால், அந்த இடத்தில் அதற்குரிய பதிலை எங்களால் வழங்க முடியவில்லை. ஆனால், நாடாளுமன்றத்திலும் சரி, இனி வருகின்ற இடங்களிலும் சரி, எமது கருத்துக்களை சரியாக தெரிவிப்போம்.

மிக முக்கியமாக தமிழர்கள் மீது இனப்படுகொலை செய்யப்பட்டது. அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு என்ன தீர்வு அதை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி தமிழர்கள் தான் முடிவை எடுக்க வேண்டும். மறப்போம் மன்னிப்போம் என தாமே கொலையையும் செய்துவிட்டு குற்றங்களையும் புரிந்துவிட்டு, படுகொலைகளையும் செய்துவிட்டு, தாமே தீர்ப்புச் சொல்லும் நிலையை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .