2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மல்லாகத்தில் பொலிஸார் சூடு; இளைஞன் பலி

Editorial   / 2018 ஜூன் 17 , பி.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். றொசாந்த், டி. விஜிதா, செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில், பொலிஸார் இன்று (17) மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதோடு, இன்னொருவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உயிரிழந்த இளைஞன், படுகாயத்துக்கு உள்ளாகி, தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் எனவும், காயத்துடன் அனுமதிக்கப்பட்ட இளைஞனுக்கு ஏற்பட்ட காயம், துப்பாக்கிச் சூட்டால் ஏற்பட்ட காயம் தானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மல்லாகம், குளமங்கால் பகுதியைச் சேர்ந்த, பாக்கியராஜா சுதர்சன் என்ற, 28 வயதான இளைஞனே, இதன்போது சுட்டுக் கொல்லப்பட்டார். 

இந்தச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் நிலவியது. குறிப்பாக, இளைஞர்கள் சுடப்பட்ட இடத்திலும், வைத்தியசாலைச் சூழலிலும், பெருமளவு இளைஞர்கள் கூடியிருந்தமையால், பதற்றம் நிலவியது. இதையடுத்து, யாழ்ப்பாண மாவட்டத்தின் ஏனைய பொலிஸ் நிலையங்களிலிருந்து மேலதிக பொலிஸார், அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

மல்லாகம் சகாயமாதா கோவில் பெருநாள் இன்று இடம்பெற்ற நிலையில், அப்பகுதியில் வைத்து,  ஏழாலையையும் குளமன்காட்டையும் சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதெனவும், அப்போது அங்கு வந்த பொலிஸாராலேயே தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக, பொலிஸ் தரப்பின் தகவல்களின்படி, மோதல்களைத் தொடர்ந்து அங்கு சென்ற போது, பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியைப் பறிப்பதற்கு முயலப்பட்டது எனவும், அதைத் தொடர்ந்தே சூடு நடத்தப்பட்டது எனவும் கூறப்படுகிறது. 

ஆனால், அதை மறுக்கும் அப்பகுதி மக்கள், அப்பகுதியில் இளைஞர்கள் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்ற போதிலும், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன், அக்குழுக்களுடன் தொடர்பைக் கொண்டிராதவர் எனவும், அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த போதே அவர் மீது சூடு நடத்தப்பட்டது எனவும் தெரிவிக்கின்றனர். 

அண்மைக்காலத்தில், இளைஞர்கள் மீது பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதும், அதன் மூலமாக அவர்கள் உயிரிழப்பதும், யாழ்ப்பாணத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருவர் உயிரிழந்த சம்பவமும், வடமராட்சி கிழக்கில் மணல்கடத்தலில் ஈடுபட்டோர் எனத் தெரிவித்து நடத்தப்பட்ட தாக்குதலில் இளைஞரொருவர் கொல்லப்பட்டமையும், யாழ்ப்பாணத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தன.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .